

புத்தாண்டை முதன்முதலில் வரவேற்கும் உலக நகரங்களில் ஒன்று – சிட்னி. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கரையிலிருக்கும் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரம். போர்ட் ஜாக்சன் ஆற்றின் பள்ளத்தாக்குப் பகுதியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட நகரம்.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியப் பழங்குடியினர் வாழ்ந்த பகுதி இது. தருக், தரவல், இயோரா என்கிற மூன்று பழங்குடியினத்தவருக்குச் சொந்தமான பகுதி இது.
இதன் நினைவாக இப்போதும் மேற்கு சிட்னியின் பள்ளிகளில், ‘நாம் கற்று விளையாடும் இந்த நிலத்தின் பாரம்பரியப் பாதுகாவலர்களான தருக் மக்களை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்; கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால மூத்த குடிமக்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்’ என்கிற அங்கீகார உறுதிமொழியைக் குழந்தைகள் சொல்கின்றனர்.
டார்லிங் ஹார்பர், சிட்னி ஓப்ரா ஹவுஸ்
மாலை மங்கும் நேரம் டார்லிங் ஹார்பர் மற்றும் அதையொட்டிய சிட்னி ஓப்ரா ஹவுஸை கடற்புறாக்கள் சூழ பார்த்து ரசிப்பது, மறக்கமுடியாத வாழ்நாள் அனுபவங்களில் ஒன்று. தமிழ்த் திரைப்படங்களில், தொலைக்காட்சி செய்திகளில் மிக பிரம்மாண்டமாகக் காட்சி தரும் ஓப்ரா ஹவுஸ் அரங்கம் நேரிலும் உள்ளம் கவர்கிறது.
உண்டு குடித்து மகிழ விதவிதமான உணவகங்களும் மது விடுதிகளும் அரங்கைச்சுற்றி அமைந்திருக்கின்றன. டிசம்பர் 31/ஜனவரி 1 நள்ளிரவு நடைபெறும் வாணவேடிக்கைக் கொண்டாட்டத்தைப் பார்க்க, டார்லிங் ஹார்பரைச் சுற்றியுள்ள நகரமையத்தின் தெருக்களில் மக்கள்கூட்டம் மாலை முதலே இடம்பிடித்து அமர்ந்துகொள்கிறது.
ஆயிரக்காணக்கான மக்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று ஒரே இடத்தில் கூடிக் கொண்டாடி கட்டியணைத்து வாழ்த்துச் சொல்லும் அனுபவம் அலாதியானது!
மார்டின்ஸ் பிளேஸ் சதுக்கம்
ஒவ்வொரு ஆண்டும் நியூ சவுத் வேல்ஸின் மிகப் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் மார்டின்ஸ் பிளேஸ் சதுக்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தச் சதுக்கத்தில் நடைபாதையில் கூட கண்ணாடிக் கூண்டுகளில் மலர்களால் அலங்கரித்து விடுகின்றனர்.
மேப்பிள் மரங்களின் அடியில் கேளிக்கைக் காட்சிகள், உள்ளூர்ச் சந்தைகள், பாடல்கள், ஆட்டம் என்று அந்த சதுக்கமே விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. சிட்னி லைட் ரயில் சேவை, நகரம் முழுவதிலுமிருந்து மக்களை ஊருக்குள் கொண்டுவந்துவிடுகிறது. பெரும்பாலும் மக்கள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
ஃபேகன் பார்க், கால்ஸ்டன்
சிட்னியின் வடமேற்குப் பகுதியில் கால்ஸ்டன் என்னும் ஊரில் அமைந்திருக்கும் இந்தப் பூங்கா, தருக் மக்கள் மீன்பிடித்து வேட்டையாடித் திரிந்த இடங்களில் ஒன்று. ஜார்ஜ் ஹால் என்கிற முதல் ஐரோப்பியக் குடியேறியின் வம்சாவழியினரிடம் இருந்து சாமுவேல் ஃபேகன் என்பவர் இவ்விடத்தை 1912-ம் ஆண்டு வாங்கி பண்ணையை நிர்வகிக்கிறார்.
அவர் இறக்கும்போது 55 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கென எழுதிவைக்கிறார். ஹார்ன்ஸ்பிஷயர் கவுன்சில் இந்நிலத்தைக் கையகப்படுத்தி, அதைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கென பெரும் பூங்காவாக மாற்றியமைத்துள்ளனர்.
இங்கு ‘கார்டென்ஸ் ஆஃப் மெனி நேஷன்ஸ்’ என பத்துக்கும் அதிகமான உலகநாடுகளின் தோட்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அந்தந்த நாட்டின் தாவரங்கள் இந்தக் குட்டிப் பூங்காக்களில் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. சீனா, டச்சு, ஜப்பான், மத்திய தரைக்கடல், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் அனைத்து கண்டங்களிலிருந்தும் தருவிக்கப்பட்ட தாவரங்கள் பூத்துச் சொரிகின்றன.
சிம்பயோ கானுயிர்ப் பூங்கா, ஹெலன்ஸ்பரி
சிட்னியிலிருந்து 60 மைல்கள் தெற்கே அமைந்துள்ள 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிம்பயோ கானுயிர்ப் பூங்கா, ஏறத்தாழ ஆஸ்திரேலியாவின் அனைத்து விலங்குகளையும் காட்சிப் படுத்துகிறது.
பூங்காவின் நட்சத்திர நாயகர்கள் கட்டாயம் கோலாக் கரடிகள்தான். உச்சாணி மரக்கிளைகளின் நுனியில் அமர்ந்து கோழித்தூக்கம் போடும் சோம்பேறிகள் இவர்கள். விழித்திருக்கும் கரடிகளோ, கைகளில் கிடைக்கும் மரக்கிளைகளைத் தொழிற்சாலைபோல வாயில்போட்டு அரைத்துத் தள்ளுகின்றன.
திறந்தவெளியில் கங்காருக்கள், வாலபிகள் நம்மோடு நடைபழகுகின்றன. அவற்றுக்கு இரைகொடுத்தால் சமர்த்தாக நம் பின்னால் குழந்தைபோல நடைபழகி வருகின்றன.
இவை தவிர பென்குயின், டிங்கோ, கேஸோவரி, சிவப்பு பாண்டா, மீர்கேட், லாமா என பறவைகளும் விலங்குகளும் சுத்தமான, பரந்த வேலிக்குள் சுற்றிவருவதைக் காணலாம்.
ஊர்வன அரங்கில் பர்மிய மலைப்பாம்பு, நீல நாக்கு ஸ்கிங்க், அமெரிக்க முதலை, கடுமையான நஞ்சுள்ள டைபான் பாம்பு உள்ளிட்டவற்றை நமக்கு அறிமுகம் செய்கிறார்கள் பெண் ஊழியர்கள். ஆறேழு தசாப்தங்களாக தனியார் குடும்பங் களின் கடும் முயற்சியால் இன்று உலகப் பிரசித்தி பெற்றுள் ளது சிம்பயோ.
ஸ்டான்வெல் டாப்ஸ்
சிம்பயோ பூங்காவிலிருந்து தென் கிழக்கே கடலை ஒட்டிய சாலையில் அமைந்திருக்கிறது ஸ்டான்வெல் டாப்ஸ். இப்பகுதியின் வெங்கடேசுவரர் கோயில் வெகு பிரபலம்.
இலவரா செங்குத்து மலைப்பகுதி சரிந்து கடலுக்குள் பாயும் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகளைப் பொறியியல் அதிசயம் எனலாம்.
ஏகப்பட்ட தொங்குபாலங்களும் வளைவுகளுமாக இந்தப் பகுதியில் காரோட்டிச் செல்லும் அனுபவம் மிக அலாதியானது. சீ கிளிஃப் பாலத்தில் காரை விட்டிறங்கி காலாற சிறு தொலைவு கடலையும் மலை முகட்டையும் ரசித்து நடக்கிறது மக்கள் கூட்டம்.
மேடம் டுஸாட்ஸ், ஸீ லைஃப் சிட்னி
டார்லிங் ஹார்பரில் அமைந்திருக்கும் மேடம் டுஸாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை வரிசைகட்டி நிற்கின்றனர்.
ஹாலிவுட் நடிகர், நடிகைகள், மண்டேலா, ஒபாமா, ஜூலியா கில்லார்ட், இங்கிலாந்து அரசகுடும்பம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஸ்டீவ் இர்வின், ராபர்ட் இர்வின், டானி மினோக் என ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள், காந்தி, டெண்டுல்கர், ஷாருக் கான், வருண் தவண், பிரியங்கா சோப்ரா, தில்ஜித் தோசஞ்ச் என இந்திய முக்கியப் புள்ளிகளும் இங்குண்டு.
ஆஸ்திரேலியாவில் எம்பெரர் பென்குயினை வெகு அணுக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு, டார்லிங் ஹார்பர் வீட் சாலையிலுள்ள ஸீ லைஃப் காட்சியகத்தில் உண்டு.
தரையில் தத்தித் தத்தி நடக்கும் பென்குயின்கள், ஐஸ் நீரில் தோட்டாக்கள் போலப் பாய்ந்து நீந்துகின்றன. 13 ஆயிரத்துக்கும் அதிகமான நீர்வாழ் உயிரினங்கள் இங்கு உண்டு.
1988-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தக் காட்சியகத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரே கடல்பசுவான பிக்குக்கு தனி குளம் அமைத்துள்ளனர்.
இங்குள்ள பெருங்கடல் மீன்காட்சியகத்தில் ஏறத்தாழ 300 கிலோ எடைகொண்ட பிலால் சுறா, மணல் புலிச் சுறா உள்ளிட்ட சுறாக்களும், திருக்கை மீன்களும் நம் தலைக்கு மேல் வலம்வருகின்றன.
மேலும் கடல் நீரமைப்பிலுள்ள பவளப் பாறைகளை நாம் தொட்டுப் பார்க்கும் வகையில் திறந்த அமைப்பில் வைத்திருக்கின்றனர். குழந்தைகள் அவற்றைத் தொட்டு விளையாடி மகிழ்வதைப் பார்த்து, பெற்றோரும் களத்தில் குதிப்பதைக் காணமுடியும்!
ஆஸ்திரேலிய அருங்காட்சியகம்
டார்லிங்ஹர்ஸ்ட் சாலையில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஆஸ்திரேலியாவின் மிகத் தொன்மையான இயற்கை வரலாற்று அருங்காட்சியகமாகும். 1827-ம் ஆண்டு ஏர்ல் பாத்ரஸ்ட் இதனை நிறுவினார்.
இன்று 21 மில்லியனுக்கும் அதிகமான காட்சிப் பொருள்களுடன் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதன் ‘கர்ரிகரங்: கடல் நாடு அரங்கு’, டோரஸ் கணவாய் தீவுவாசிகள் மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் பண்பாட்டைக் காட்சிப்படுத்துகிறது.
அதேபோல ‘வன்சல்மோனா’ அரங்கு, பஸிஃபிகா பண்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இவ்விரு காட்சியகங்களின் ஒலி ஒளி அமைப்பும் காட்சிப்படுத்தலும் மனதைக் கொள்ளைகொள்ளும்.
ஜுராசிக் அரங்கு, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் 200 பொக்கிஷங்கள் அரங்கு, சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய விலங்குகளைக் காட்சிப்படுத்தும் சர்வைவிங் ஆஸ்திரேலியா அரங்கு ஆகியவற்றை நிறுத்தி நிதானமாகப் பார்க்க குறைந்தது ஒரு முழு நாளும் தேவை.
புளூ மவுன்டன்ஸ், கடூம்பா
சிட்னியிலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் மேற்கே அமைந்திருக் கும் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதி புளூ மவுன்டன்.
சாலையோர மேப்பிள் மரங்களையும் பாதையில் லியூரா என்கிற அழகிய ஐரோப்பிய சாயல் கொண்ட சிற்றூரையும் தாண்டிச் சென்றால், வென்ட்வர்த் அருவி, பேரரசி அருவி போன்றவற்றைக் காணும் சுற்றுலா நடைபாதையை அடையலாம்.
அதன் முடிவில் வானுயர நிற்கின்றன மூன்று சகோதரிகள் பாறைகள். மீஹ்னி, விம்லா மற்றும் குன்னெடூ என்ற மூன்று சகோதரிகள் வானுயர்ந்த கல் தூண்களாக மாற்றப்பட்டதைப் பற்றிய தருக் மற்றும் குண்டுங்குர்ரா பழங்குடியினரின் பழங்கதையொன்றின் பொருட்டு இந்தப் பாறைகளுக்கு அந்தப் பெயர் வந்ததாம்.
யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதி, 1.03 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மணற்கல்லாலான இந்த மேட்டுப்பரப்பு, செங்குத்தான பாறைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது.
இதில் மிதவெப்ப மண்டல யூகலிப்டஸ் காடுகள் பெருகிக் கிடக்கின்றன. இதன் ஸ்கைவே, கேபிள் கார்கள் பிரபலம் என்றாலும், மக்கள் காத்துக்கிடந்து பார்த்துச் செல்வது, ரயில்வண்டியை! உலகின் மிகவும் செங்குத்தான பயணிகள் ரயில், 52-டிகிரி சாய்வில் ஒரு பாறைப்பக்கச் சுரங்கப்பாதை வழியாக கீழே இறங்குகிறது. தவற விடக்கூடாத அனுபவம் இது.
ஹன்டர் பள்ளத்தாக்கு
சிட்னியிலிருந்து ஏறத்தாழ 245 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது ஆஸ்திரேலியாவின் மது சொர்க்கம் – ஹன்டர் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை திராட்சைத் தோட்டங்கள் பரந்து படர்ந்திருக்கின்றன.
குட்டைச் செடிகளில் பொன்னிறமாக ஜொலிக்கும் திராட்சைகளை ரசித்தபடியே இங்குள்ள குடும்ப வைனரிகளில் ‘ஒயின் டேஸ்டிங்’ செய்வது அட்டகாசமான அனுபவம். சார்தொனே, செமிலொன், ஷிராஸ் ஒயின் வகைகள் இங்கு வெகு பிரபலம்.
ரோச் எஸ்டேட்டிலுள்ள மக்குயிகன் வைனரியில் 10 டாலருக்கு ஒரு மணி நேர ஒயின் டேஸ்டிங் அனுபவம் கிடைக்கிறது. குறைந்தது ஆறு வகையான ஒயினை நமக்கு நளினமாகப் பேசி அறிமுகம் செய்கின்றனர்.
அருகிலேயே இருக்கும் ஒய்ஷி தாய் உணவகத்தில் சஷிமி, சுஷி சாப்பிட்டு மீண்டும் அடுத்தகட்ட பீட்டர்சன் ஹவுஸுக்கு ஒயின் டேஸ்டிங் அனுபவத்துக்குப் போகலாம்.
35 டாலர் கட்டினால் டுயெட்டோ, ஃபெடா, லப்னா, லவோஷ், துக்கா என்று விதவிதமான சீஸுடன் மொஸ்கெடோ, புரோசெக்கொ ஒயின் என்று இன்னொரு சுற்று! தென்துருவப்பகுதியிலிருந்து அவ்வப்போது குளிர்காற்று அடித்தாலும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சிட்னியில் கடும் வெப்பம் நிலவுவதுண்டு.
ஆனால், விழாக்கால அனுபவத்தைத் தவற விடக்கூடாது என்று எண்ணினால், புத்தாண்டை சிட்னி ஹார்பர் வாணவேடிக்கையுடன், உலகத்தோர் அனைவருக்கும் முன்பே தொடங்கலாம் நாம்!
- niveditalouis@gmail.com