

“தொடர்ச்சியாக வெளிநாட்டுச் சுற்றுலாவை பற்றியே எழுதறீங்க. அப்பப்போ நம்மூர் பக்கமும் வாங்க...” என்று கேட்பவர்களுக்காக இதோ அசாம்! இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகமாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
அவற்றில் அனைவரும் நன்கு அறிந்தது அசாம். ‘என்ன சார், காசிரங்காவில் காண்டாமிருகம் பார்க்கச் சொல்ல போகிறீர்களா?’ என்று கேட்பவர்களுக்காக, காசிரங்காவை விட்டுவிட்டு மற்ற இடங்களைச் சுற்றுவோம்.
நதிக்கரை தீவு
அசாம் சுற்றுலா செல்வோர் நிறைய பேர் மிஸ் பண்ணும் இடமாக இருப்பது, மஜுலி. அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் மஜுலி, உலகின் மிகப்பெரிய நன்னீர் மற்றும் நதிக்கரை தீவு என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய நதித் தீவு என்கிறார்கள் இதை.
குவஹாத்தியில் இருந்து மஜுலியை அடைய, நாம் முதலில் ஜோர்ஹட் நகருக்குச் செல்ல வேண்டும். இது குவஹாத்தியில் இருந்து சுமார் 350 கி.மீ தூரம் என்றாலும் பயணக்களைப்பே தெரியாது. இவை தவிர, ரயில் மற்றும் விமான பயணத்தின் மூலமாகவும் ஜோர்ஹாட்டை அடையலாம்.
பிறகு நீங்கள் இறங்குமிடத்திலிருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ மூலமாக நிமதி ஹாட் சென்று அங்கிருந்து படகுப்பயணம். மஜூலி சென்றடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.
சற்றே வித்தியாசமான நிறத்தில் சுழித்துக் கொண்டு ஓடும் பிரம்மபுத்திரா நதியில் நம் படகு பயணம் மஜுலியை நோக்கி துவங்குகிறது. படகில் நம் கூடவே கார், பைக், ஆட்டுக்குட்டி போன்றவற்றையும் பயணிக்கின்றன.
எனவே, இது மனிதர்கள் கம் கார்கோ படகு என்று சொல்லலாம். ஒரு வழியாய் மஜுலியை வந்தடைந்தவுடன் உங்கள் தங்குமிடத்தில் சற்றே இளைப்பாரி பிறகு தீவை சுற்றத் துவங்குங்கள்.
வைஷ்ணவ கலாச்சார மையம்
மஜூலி... அசாமிய வைஷ்ணவ கலாச்சாரத்தின் மையம் மற்றும் பிறப்பிடம் என சொல்லப்படுகிறது. இங்கே பள்ளி குழந்தைகளில் இருந்து, டீகடைக்காரர் வரை யாரைப் பார்த்தாலும் பஞ்சகச்சமே ஆடை.
திரும்பிய திசை எல்லாம் நீங்கள் வைஷ்ணவம் உணர்வீர்கள் இங்கே! துளசிச் செடி பார்த்திருப்பீர்கள். இங்கே துளசி மரத்தைப் பார்க்கலாம். இங்கு பல வைஷ்ணவம் போதிக்கும் மடங்கள், பள்ளிகள், மற்றும் எக்கச்சக்க அறைகளைக் கொண்ட சட்ராஸ்(சத்திரம்)கள் உள்ளன. அனைத்தும் அப்படியே பழமை மாறாமல் இன்றும் வைஷ்ணவம் போதிக்கின்றன.
அப்படியே மலர்கள் அடர்ந்த இந்தத் தீவைச் சுற்றி வரும் போது இங்கே வாழும் மிஷ்ஷிங் பழங்குடியினரின் அழகான ஓட்டு வீடுகளையும், நீங்கள் கேட்டுக் கொண்டால் உங்களுக்காக அவர்கள் ஆடும் அழகான நடனத்தையும் கண்டு ரசிக்க முடியும்.
முகமூடிகள்
மஜூலியின் மற்றொரு சிறப்பு, முகமூடிகள். பல நூறு வருடங்கள் பழமையான முகமூடிகளை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த முகங்கள் பெரும்பாலும் ராமாயணம் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள்.
ஆனால் எப்போது செய்தார்களோ, எப்படி பாதுகாக்கிறார்களோ? இந்த முகமூடி கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் அப்படி ஒரு தத்ரூபம் தெரிகின்றன. மிகச் சிறப்பான தங்குமிடங்கள் இங்கே இல்லை என்றாலும் ஓர் இரவாது மஜுலியில் தங்குதல் நன்று.
தற்போது நிறைய சுற்றுலா பயணிகளை கவரும் மஜூலி, உள்ளூர் மக்களின் சிறந்த கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள். மஜுலி உங்கள் மனதை நிறைத்திருக்கும் அதே வேளையில் நீங்கள் அடுத்ததாக சென்றடைய வேண்டிய இடம் காமாக்யா.
காமாக்யா
காமாக்யாவுக்குச் செல்லாமல் உங்கள் அசாம் பயணம் முழுமை பெறாது. குவஹாத்தியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் நீலாச்சல் என்று அழைக்கப்படும் சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கிறது காமாக்யா.
சிவபெருமானின் மனைவியான தாட்சாயிணி, அவரது தந்தை நடத்திய யாகத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் யாக குண்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அந்த உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது தேவியின் உடல் பாகங்கள் சிதறிய இடங்களில் ஒன்று காமாக்யா.
இக்கோயிலின் கருவறையில் தேவியின் உருவம் இல்லை. ஒரு குகைக்குள் இயற்கையாகவே அமைந்துள்ள ‘யோனி’ அதாவது பெண் பிறப்புறுப்பு வடிவமே இங்கே வழிபாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தேவிக்கு மாதவிடாய் ஏற்படுவதாக, நம்பப்படுவதால் அப்போது மூன்று நாட்கள் கோயில் நடை சாத்தப்படுகிறது.
இந்த மூன்று நாட்களில் அருகே உள்ள பிரம்மபுத்திரா நதியின் நிறம் சிவப்பாக மாறுவதாக நம்புவோரும் உண்டு. காமாக்கியாவின் வழிபாட்டில் தேவியின் “யோனி” இருப்பதால் இக்கோயிலின் கருவறை குறித்த புகைப்படங்கள் எதுவும் கிடைப்பதில்லை.
சுவல்குச்சி
சரி, அசாமின் இரண்டு முக்கியமான இடங்களைப் பார்த்தாயிற்று. அடுத்ததாக சுவல்குச்சி. தலைநகர் குவஹாத்தியில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் இருக்கிறது சுவல் குச்சி. இது ஒரு சிறிய கிராமம் என்றாலும் இதுதான் அசாமின் ஜவுளி உற்பத்தியில் முதலிடம் பெறுகிறது. தென்னிந்தியாவில் எப்படி கோவைக்கு மான்செஸ்டர் என்ற பெயர் உள்ளதோ அதேபோன்று வடபகுதியின் மான்செஸ்டர் என்று சுவல் குச்சி அழைக்கப்படுகிறது.
இங்கே குறுகிய தெருக்களில் அமைந்திருக்கும் ஒவ்வொரு வீடும், புடவை நெய்யும் ஃபேக்டரி என சொல்லலாம். இந்த நெசவாளர்கள் உருவாக்கும் மூகா மற்றும் பாட் ஆகிய பட்டுகள், உலகில் வேறு எங்கும் செய்யப்படுவதில்லை. அதற்காக சுவல்குச்சி வெறும் நெசவாளர் கிராமம் என்று நினைத்து விடாதீர்கள்.
மூங்கில் தோய்ந்த கூரை வீடுகள், பசுமை செறிந்த இயற்கை நீர் வளம் என இதுவும் தற்போது ஒரு சுற்றுலா தலமாக மாறி வருகிறது. சிறிய சிறிய பட்ஜெட் ஹோட்டல்களும், உள்ளூர் உணவைச் சுவைக்க வழி வகிக்கின்றன. பட்டுப்புடவை நெய்யும் இடம் மட்டும்தானா? என்று கேட்பவர்களுக்கு, ஏராளமான புடவைக் கடைகளும் இங்கே உண்டு, ஏமாற்று வேலை இல்லை.
எப்படி ஒரிஜினல் எனக் கண்டுபிடிப்பது என்று கடைக்காரரிடம் கேட்டால்,ஒரு புடவையை நம் கையில் கொடுத்து, பொசுக்கென்று அதன் அடிப்பகுதியில் நெருப்பை பற்ற வைத்து எப்படி ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லித் தருகிறார்கள்.
“பட்டுப் புடவைனா ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே?” என்று யோசிப்பவர்களுக்கு, உங்கள் பர்ஸ் அல்லது உங்கள் கணவரின் பர்சுக்கு ஏற்ற விலையிலேயே இங்கே புடவைகள் கிடைக்கின்றன. மேலும் கடைக்காரர்களிடம் கேட்பீர்களேயானால், புடவை செய்யும் இடத்துக்கே உங்களை அழைத்து சென்றும் காண்பிக்கிறார்கள்.
கருப்பு தேயிலை
அசாம்னா டீ இல்லாமலா? என்று கேட்பவர்களுக்கு, அசாமின் தேயிலைத் தோட்டங்கள் உங்கள் பயணத்தை வேறொரு சுவாரசியத்துக்கு எடுத்துச் செல்லும். அசாமில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடத்தோடு கூடிய தோட்டங்களுக்கே செல்கிறார்கள். காரணம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவிழ்ந்து நிறைந்து கிடக்கும் பசுமை.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும் கருப்பு தேயிலை, அசாமில் நிறைய விளைகிறது. அசாமின் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே நீங்கள் தங்குவதற்கு மற்றுமொரு காரணம் இங்கே அமைந்துள்ள காலனித்துவ அடையாளமாகத் திகழும் பங்களாக்கள். ஆங்கிலேயர்கள் காலத்து வீடுகளை நினைவுக்கு கொண்டு வரும்.
இந்தப் பங்களாக்களில் ஒரு முறையேனும் கட்டாயம் தங்கி அனுபவித்தல் சுகம். இங்கே தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிப் பார்க்கவும், தேநீர் சுவையை அனுபவிக்கவும், உள்ளூர் மற்றும் பிற உணவு வகைகளை ருசிபார்க்கவும் உங்களுக்கு அதிகம் நேரம் தேவைப்படும்.
தேயிலைத் தோட்ட சுற்றுலாவை அசாம் அரசு அதிகம் ஊக்குவிக்கிறது. இதில் மிகப் பிரபலமாக சுமார் 12 தேயிலைத் தோட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு தேயிலைத் தோட்டத்துக்கும் ஒரு தேநீர் கலாச்சாரம் மற்றும் வரலாறு இருக்கிறது.
அசாம் வடகிழக்கு மாநிலங்களின் சிறந்த அடையாளம். வனவிலங்குகள், தேயிலை தோட்டங்கள், பிரம்மபுத்திரா, காமாக்யா, மஜூலி என்று இன்னும் சொல்லிக் கொள்ள நிறையவே நிறைந்திருக்கிறது இங்கு!
- malaipa@yahoo.in