மதுரை வண்டியூர் பூங்காவில் குதூகலிக்க திரளும் மக்கள்! - ஒரு விசிட் ரிப்போர்ட்

மதுரை வண்டியூர் பூங்காவில் குதூகலிக்க திரளும் மக்கள்! - ஒரு விசிட் ரிப்போர்ட்
Updated on
2 min read

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்துவைத்த வண்டியூர் மாநகராட்சி பூங்காவுக்கு தினமும் 8 ஆயிரம் பேர் முதல் 10 ஆயிரம் பேர் வரை வந்து குதூகலமாக பொழுது போக்கிச் செல்கின்றனர்.

இதுவரை வருவாய் ஈட்டித்தராத இந்தப் பூங்கா, மாநகராட்சி ஆணையர் சித்ரா முயற்சியால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி வருவாய் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

மதுரை வண்டியூர் கண்மாயின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் அமைந் துள்ள வண்டியூர் பூங்கா ரூ.50 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு ‘குட்டி மெரினா’ போன்று உள்ளூர் மக்கள் பொழுது போக்கும் இடமாக மாற்றப் பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். இந்தப் பூங்காவில் நடைப்பயிற்சிப் பாதை, சைக்கிள் வழித்தடம், ஆண், பெண்களுக்கு தனித்தனி யோகா மற்றும் தியான மண்டபங்கள், திறந்தவெளி அரங்கம், படகு சவாரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள், ஸ்கேட்டிங் டிராக் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. இந்த வண்டியூர் பூங்கா மூலம் மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட வருவாய் கிடைக்கவில்லை.

படகு சவாரியில் உயிர்காக்கும் கவச உடை அணிந்து பொதுமக்களை அனுமதிக்க வேண்டும், நீச்சல் பயிற்சி தெரிந்தோரை மட்டுமே படகு குழாமில் பணியமர்த்த வேண்டும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்.

<div class="paragraphs"><p>கடல் போல் காட்சியளிக்கும் வண்டியூர் பூங்கா கண்மாயில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.</p></div>

கடல் போல் காட்சியளிக்கும் வண்டியூர் பூங்கா கண்மாயில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

பூங்கா கண்மாயில் ஆகாயத் தாமரைகள், வளாகத்தில் செடி, கொடிகள் அடர்ந்து வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொருத்தப்பட்டுள்ள 700-க்கும் மேற்பட்ட மின் விளக்குகளைப் பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது மறுசீரமைக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1.50 கோடி வருவாய் கிடைக்க ஆணையர் சித்ரா ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வண்டியூர் பூங்கா பராமரிப்பு, செயல்பாட்டை மாநகராட்சி தனியாருக்கு ஆண்டுக்கு ரூ. 1.50 கோடி வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், கழிப்பறைகளைச் சுகாதாரமாகப் பராமரிப்பதோடு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உரிமம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 52 வகையான நிபந்தனைகளை விதித்தே ஆணையர் சித்ரா ஒப்பந்தப்புள்ளி கோரினார்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் பேர் பூங்காவுக்கு தற்போது வருகின்றனர். மற்ற நாட்களில் 8 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.20-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.

மின்கட்டணம், மின் விளக்குகள் பராமரிப்பு, பூங்காவில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், கட்டணச்சீட்டு விநியோகிப்போர், பரிசோதகர் கள், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவோர் உள்ளிட்டோரின் ஊதியத்துக்கு ஒப்பந்தப்புள்ளி எடுத்தவருக்கு செலவுகள் இருக் கின்றன. இந்தச் செலவுபோக அவர்களுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தப் பூங்கா சிறப்பாகப் பராமரிப்பதை, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் தினமும் சென்று கண்காணிக்க ஆணையர் சித்ரா உத்தரவிட்டுள்ளார். இன்னும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒப்பந்தப்புள்ளி எடுத்தவர் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

மதுரை வண்டியூர் பூங்காவில் குதூகலிக்க திரளும் மக்கள்! - ஒரு விசிட் ரிப்போர்ட்
எரிவாயு தட்டுப்பாடு: கோவை சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in