எரிவாயு தட்டுப்பாடு: கோவை சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு

எரிவாயு தட்டுப்பாடு: கோவை சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு
Updated on
1 min read

கோவை: எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு துறை மட்டுமின்றி கோவை போன்ற நகரில் தொழில் துறையையும் பாதிக்கத் தொடங்கி உள்ளது.

கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் துறையின் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. இந்த துறையில் வணிக சிலிண்டர் பயன்பாடு என்பது, மனிதனுக்கு சுவாசிக்கும் ஆக்சிஜன் போல அத்தியாவசியமானதாகும்.

சுந்தராபுரம் சிட்கோ, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு வரை பல்வேறு பகுதிகளிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களான கிரில் கேட், பேப்ரிகேஷன், பவுண்டரி, வெட்கிரைண்டர், பம்ப் செட், அட்டைப்பெட்டி தயாரிப்பு, பொறியியல் உற்பத்தி பொருட்கள், வெட் கிரைண்டர், கல்குவாரிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பயன்படும் டேங்கர் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் உற்பத்தியில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் (சிட்கோ) தலைவர் என்.மதிவாணன் கூறியதாவது: எங்கள் தொழிலில் காஸ் சிலிண்டர் பிரதான அங்கம் வகிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 2000 கிலோ வணிக பயன்பாட்டுக்கான காஸ் தேவைப்படுகிறது. 20 நாட்களுக்கு 44,000 கிலோ காஸ் தேவை. வெல்டிங் தொடங்கி அனைத்து விதமான தளவாட உற்பத்தியிலும் காஸ் பயன்பாடு இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் விலை உயரத் தொடங்கிவிட்டது. வணிக சிலிண்டர் ஆர்டர் செய்தால் உடனடியாக, தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும். தற்போது தட்டுப்பாடு தொடங்கியிருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.

இந்த நிலைமை தொடர்ந்தால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலும், உற்பத்தி பாதிப்பு மற்றும் உரிய நேரத்தில் உற்பத்தி பொருளை டெலிவரி செய்ய முடியாத நிலையும் ஏற்படும். இது தொழில்துறைக்கு பாதகமான விஷயமாகும்.

மத்திய, மாநில அரசுகள் காஸ் தட்டுப்பாடு நிலைமை சீராகும் வரை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் செலுத்துவதில் சலுகைகளை வழங்க வேண்டும். மேலும், மூலப்பொருட்களான அலுமினியம், காப்பர், கன்மெட்டல் உள்ளிட்டவை விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால், ஆர்டர் எடுத்தபின்பு நிலையில்லாத விலையால் பெரும் பாதிப்பை நாங்கள் சந்திக்கிறோம்.

இவற்றுக்கிடையே தற்போதைய காஸ் தட்டுப்பாடு தொழில்துறையை மேலும் மோசமான நிலைக்கே கொண்டு செல்லும். இவற்றை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஆரம்ப கட்ட நிலையில் பாதிப்புகளை தற்போது சந்திக்க தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எரிவாயு தட்டுப்பாடு: கோவை சிறுதொழில் நிறுவனங்கள் பாதிப்பு
ட்ரம்ப் விரும்பினாலும் கூட ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வருவது சாத்தியம் இல்லையா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in