

ஊட்டி: நீலகிரி மலை ரயில் கட்டணம் இன்று (பிப். 21) முதல் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுனெஸ்கோ’ அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய, உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு சுமார் 25 லட்சம் பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மலை ரயிலில் கோடை காலத்தில் பயணிக்க முன்பதிவு முழுவதும் முடிந்த நிலையில், பலருக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நீலகிரி மலை ரயில் நஷ்டத்தில் இயங்கியதால் 2020-ல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பு கட்டணம் ரூ.470, இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) ரூ.145, இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ.75 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.365-ஆக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு (முன்பதிவு) கட்டணம் ரூ.100, இரண்டாம் வகுப்பு (முன்பதிவற்றது) ரூ.50-ஆக நிர்ணயிக்கப்பட்டு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீலகிரி மலை ரயிலில் அடிப்படைக் கட்டணம் பிப்ரவரி 21-ம் தேதி (இன்று) முதல் 5 சதவீதம் அதிகரிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பிரபலமான நீலகிரி மலை ரயில் சேவை 1899-ல் தொடங்கப்பட்டது.
2005-ல் யுனெஸ்கோவால் இது உலகப் பாரம்பரிய தளமாக சேர்க்கப்பட்டது. தற்போது, நீலகிரி மலை ரயில் பாதையில் 3 வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 8 பயணங்கள், கோடை மற்றும் பிற விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், திருவிழாக்களின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி மலை ரயில் பிரிவில் சரக்கு கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சரக்கு கட்டணம் 204% அதிகரித் துள்ளது. கூடுதலாக, பிற செயல்பாடுகள், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஊழியர்களின் செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இருப்பினும், வழக்கமான ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்படவில்லை.
இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை நிர்வகிக்க பிப். 21 முதல் (இன்று) வழக்கமான ரயில்களின் அடிப்படைக் கட்டணம் 5 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. முன்பதிவுக் கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. பொருந்தக்கூடிய வகையில் ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்கப்படும்.
மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். இந்த பாதையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.