Published : 24 May 2023 06:05 AM
Last Updated : 24 May 2023 06:05 AM

உதகை மலர் கண்காட்சி நிறைவு விழாவில் சிறந்த மலர் வளர்ப்புக்கு முதல்வர் கோப்பை

உதகை மலர் கண்காட்சி நிறைவு விழாவில், சிறந்த மலரை வளர்த்த ஜான்சி கிஷோர் என்பவருக்கு முதல்வர் கோப்பையை வழங்கிய சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன். படம்: படம்:ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை மலர் கண்காட்சி சிறந்த மலர் வளர்ப்புக்கு முதல்வர் கோப்பைநிறைவு விழாவில், உதகை மலர் கண்காட்சியில் சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பையை வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி தட்டிச் சென்றது. உதகையை சேர்ந்த ஜான்சி கிஷோருக்கு முதல்வர் கோப்பை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 19-ம் தேதி 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. காட்சியின் சிறப்பம்சமாக சுமார்‌ 50,000 கார்னேஷன்‌ மலர்களைக் ‌கொண்டு 40 அடி அகலத்தில்‌ 48 அடி உயரத்தில்‌ பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த தேசிய பறவை மயில் ‌அலங்காரம், ‌பார்வையாளர்களை ஈர்க்கும் ‌வண்ணம்‌ அமைந்திருந்தது.

மேலும்‌, உதகையின் ‌200-வது அகவையை கொண்டாடும்‌ வகையில் ஊட்டி 200 - வடிவம்‌, தமிழ்நாடு அரசின்‌ திட்டமான மீண்டும்‌ மஞ்சப்பை விழிப்புணர்வு, உதகை தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டு 175 நிறைவை குறிக்கும் ‌வகையில், 175-வது ஆண்டு உருவ வடிவமைப்பு உள்ளிட்டவை பார்வையாளர்களை வரவேற்கும் ‌விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியின் சிறப்பம்சமாக வெளிநாடுகளில்‌ இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்ச்செடிகள் ‌மற்றும் ‌மலர்களைக் ‌கொண்டு 35000 மலர்த்தொட்டிகள்‌ மற்றும் 125 நாடுகளின்‌ தேசிய மலர்கள்‌ காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஐந்து நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, உதகை தாவரவியல் பூங்காவில் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சிபிலா மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கண்காட்சியின் முக்கிய அம்சமான சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பையை, வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி தட்டிச் சென்றது. சிறந்த மலரை வளர்த்த உதகையை சேர்ந்த ஜான்சி கிஷோருக்கு முதல்வர் தங்க கோப்பை வழங்கப்பட்டது. 36 சுழற்கோப்பைகள் உட்பட போட்டியில் பங்கேற்ற பூங்காக்களுக்கு 427 கோப்பைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், வன அலுவலர் கவுதம், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கருப்புசாமி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலசங்கர் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x