Published : 10 Feb 2023 01:07 PM
Last Updated : 10 Feb 2023 01:07 PM

கூடலூரில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? - புதர்மண்டி கிடக்கும் தகவல் மையம்

புதர்மண்டி கிடக்கும் தகவல் மையம்

கூடலூர்: சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் கூடலூர் புறக்கணிக்கப்படுவதால், சுற்றுலா வாய்ப்புகள் கேரளாவுக்கு செல்வதை தடுக்க, சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில், உதகை மற்றும் குன்னூருக்கு மட்டுமே சுற்றுலா துறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், மற்றொரு சட்டப்பேரவைத் தொகுதியான கூடலூர் கண்டுகொள்ளப் படுவதில்லை என்று கூறப்படுகிறது. கூடலூரில் பெரும்பாலான பகுதிகள் வனம் மற்றும் சர்ச்சைக்குரிய செக்ஷன் 17 நிலங்களாக உள்ளன.

முதுமலை மற்றும் ஊசி மலையே பிரதான சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் ஊசி மலை இருப்பதால், சுற்றுலா துறை கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கூடலூரை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, "கூடலூரில் சுற்றுலாவுக்கான ஏற்ற இடங்கள் அதிகம் உள்ளன.

வனத்துறை மற்றும் சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டறிந்து வாய்ப்பு ஏற்படுத்தினால் சுற்றுலா வளரும். ஊசி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பில்லை. மேலும், கூடலூரில் உள்ள சுற்றுலா தகவல் மையம், புதர்மண்டி பயனற்று கிடக்கிறது.

இந்த மையம் உள்ளது உள்ளூர்வாசிகளுக்கே தெரிவதில்லை" என்றனர். கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா, வர்கிஷ், உஸ்மான், ஆபிதா பேகம், சத்தியசீலன் ஆகியோர் கூறும்போது, "இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், கூடலூர் வழியாக உதகைக்கு வந்து செல்கின்றனர்.

அதேசமயம், அழகிய பசுமை பள்ளத்தாக்குகளை கொண்ட பகுதியாக கூடலூர் திகழ்கிறது. ஆனால், இப்பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 சினிமா திரையரங்குகள் இருந்தன. ஆனால், நாளடைவில் திருமண மண்டபமாகவும், ஓட்டலாகவும் மாறிவிட்டன.

பூங்கா, விளையாட்டு மைதானம், திரையரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். முதுமலை அல்லது ஊசி மலை காட்சி முனைக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள கூடலூரில், சுற்றுலா திட்டங்கள் இல்லை. ஆண்டுதோறும் தனியார் பள்ளிக்கூட மைதானத்தில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது.

கூடலூரில் பூங்கா அமைத்தால், மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரிக்கும், வணிக ரீதியாகவும் கூடலூர் முன்னேற்றம் பெரும். மேலும் கோடை விழா மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும் பயன்படும். கூடலூரை அடுத்த மாக்கமூலா பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் சர்வே எண். 745 அரசு நிலம் உள்ளது.

இதில் பூங்கா அமைத்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். இதுவரை பொழுதுபோக்கு சுற்றுலா திட்டங்கள் இல்லாததால், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பணியிட மாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர்.

எனவே, கூடலூர் பகுதி வளர்ச்சி பெற பூங்கா உட்பட்ட சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுற்றுலா துறை அமைச்சராக இருப்பதால், கூடலூருக்கு சுற்றுலா துறையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x