Published : 26 Oct 2022 04:05 AM
Last Updated : 26 Oct 2022 04:05 AM

உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

பொள்ளாச்சி / உடுமலை

தீபாவளி பண்டிகையையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு சிவராத்திரி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன் தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா வந்தனர். பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். திருமூர்த்தி அணை, காண்டூர் கால்வாய், எத்தலப்பர் தொடர்பான சிலைகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள், பெற்றோர்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை தினத்தையொட்டி, நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும்பலர் கலந்து கொண்டனர். குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களின் நினைவாக திதி கொடுத்து வழிபட்டனர். இதனால், கோயில் வளாகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர் விடுமுறை மற்றும் தீபாவளியையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால், சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

நேற்று முன்தினம் வார விடுமுறை, தீபாவளி விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நவமலை உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணிகள் விதி மீறி வனத்துக்குள் சென்றுவிடாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x