Last Updated : 24 Jan, 2024 09:06 PM

 

Published : 24 Jan 2024 09:06 PM
Last Updated : 24 Jan 2024 09:06 PM

தொடர் உயிரிழப்புகளால் புதுச்சேரி கடற்கரைகளில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

புதுச்சேரி: தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரிப்பால் கடலில் இறங்கி கால் நனைக்கவே கடும் கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கரையில் இருந்தே வேடிக்கை பார்க்கும் சூழலில் மக்கள் உள்ளனர்.

புதுவையில் கனகசெட்டிகுளம் மூலம் புதுக்குப்பளம் வரை 31 கிமீ கடற்கரை உள்ளது. ப்ரோமனேட் கடற்கரை, பாண்டி மெரீனா, சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. சுனாமிக்கு பிறகு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டப்பட்டது.

இதனால் கடலில் இறங்கி விளையாட முடியவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரூ.25 கோடியில் தலைமை செயலகம் எதிரே கூம்பு வடிவ அமைப்பு கடலில் இறக்கப்பட்டதால் செயற்கை மணல் பரப்பு உருவானதால் கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், விளையாடி மகிழ்கின்றனர். ஆபத்தை உணராமல் சிலர் திடீரென கடலில் இறங்கி குளிக்கும்போது ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த 13 ஆண்டுகளில் கடலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக செயற்கை மணல்பரப்பு உருவான பிறகு அதிக உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

கடந்த 5 ஆண்டில் 4 கடற்கரைகளில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் தற்போது வரை 7 பேர் இறந்துள்ளனர். கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உயிரிழப்பதை குறித்து முதல அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

முதல்வர் ரங்கசாமி, “கடற்கரை புதுச்சேரியில் அழகாக இருக்கும். அதன் ஆபத்தை பலரும் உணர்வதில்லை. கடலை வேடிக்கை பார்த்தாலே ஆனந்தம் தரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுவையில் ஏற்கெனவே கடலில் இறங்கி குளிக்க தடை உள்ளது. வெறும் உத்தரவு மட்டும் உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால் மாவட்ட நிர்வாகம் தடையை முழுமையாக அமல்படுத்த முடிவு எடுத்தது. தற்போது கடலில் கூட கால் நனைக்க விட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கரையில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறுகையில், “கடலில் கால் நனைக்கக்கூட அனுமதி மறுக்கின்றனர். குளிப்போரை தடுக்கலாம். குளிப்போர் கடலில் அடித்து செல்லப்பட்டால் அதை மீட்க தனிக்குழுவை நியமிக்கலாம்” என்றனர். இதனால் கரையில் அமர்ந்துதான் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலை பார்த்தனர். பாதுகாப்பு பணியில் இருப்போரோ, கடலில் பலரும் உயிரிழப்பை சந்திப்பதால் இதை முழுமையாக அமல்படுத்துகிறோம் என்றனர்.

இதுதொடர்பாக அரசு தரப்பில் விசாரித்தால், “உயிரிழப்புகள் கடலில் அதிகரித்துள்ளன. அரசு உத்தரவை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான பரிந்துரை சுற்றுலாத்துறை மூலம் வருவாய்த்துறை அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x