Published : 03 Sep 2023 04:14 AM
Last Updated : 03 Sep 2023 04:14 AM

விடுமுறை நாளில் கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘ராட்சத சைக்கிள் படகு’

ஏரியில் சைக்கிள் படகில் சவாரி செய்த இளைஞர்கள்

கொடைக்கானல்: வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.

கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கொடைக்கானல் மோயர் பாய்ன்ட், குணா குகை, தூண் பாறை, பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், பைன் மரக்காடுகள், வெள்ளி நீர்விழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பகலில் இதமான தட்ப வெப்பநிலையும், அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசியது. மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச் சென்றன. பிற்பகல் 2 மணிக்கு மேல் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சாரலில் நனைந்த படி இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ராட்சத சைக்கிள் படகு: கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் படகுகள் இயக்கப் படுகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 3 மிதவை சக்கரங்களை கொண்ட ராட்சத சைக்கிள் படகை (கேனோ மிதி படகு) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த படகில் பயணம் செய்வது நீரில் சைக்கிள் ஓட்டுவதுபோல் இருக்கும். இந்த படகில் இருவர் பயணம் செய்ய 20 நிமிடத்துக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்து சைக்கிள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x