Last Updated : 11 Jul, 2023 11:03 AM

 

Published : 11 Jul 2023 11:03 AM
Last Updated : 11 Jul 2023 11:03 AM

வேடந்தாங்கல் மேம்படுத்தப்படுமா? - சுற்றுலா பயணிகள், சுற்றுப்புற கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பறவைகளின் ஓவியங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டப்பணிகளை செயல்படுத்தி, உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் நடுவே, அடர்ந்த கருவேல மரங்களுடன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளுக்கான இதமான சீதோஷ்ணம் நிலவுவதால், ஆண்டுதோறும் சீஸன் தொடங்கும். நவம்பர் மாதத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து பல்வேறு விதமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வரும். ஏரியின் நடுவே உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள், குஞ்சுகள் வளர்ந்ததும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.

ஏரியில் உள்ள கருவேலம் மற்றும் நீர் கடப்பை மரங்களில் கூடு கட்டுவதை பறவைகள் பெரும்பாலும் விரும்புகின்றன. ஏனென்றால், இந்த மரத்தில் அடர்த்தியான மரக்கிளைகளுடன் அமைந்துள்ளதால் இதில், அமைக்கப்படும் கூடு பலத்த காற்றின்போதும் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும்.

கூடுகளில் தங்கியுள்ள பறவைகளை, சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இவ்வாறும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பைனாகுலர் கருவியை வாடகைக்கு வழங்குவது, தின்பண்டங்கள் மற்றும் உணவு விற்பனை போன்ற தொழில்களை வேடந்தாங்கல் கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

நெல்வாய்-வேடந்தாங்கல் செல்லும் சாலையில் பொலிவிழந்து காணப்படும்
பறவைகள் ஓவியப்பலகை.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரணாலயத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பறவைகளின் சிலைகள் மற்றும் சரணாயலத்துக்கு வரும் வழியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பறவைகளின் ஓவியங்கள் அமைக்கப்பட்டன.

சுற்றுலா பயணிகள் மற்றும் சிறுவர்களை இவை பெரிதும் ஈர்த்தன. ஆனால், முறையான பராமரிப்பின்றி தற்போது, ஓவியங்கள் பொலிவிழந்து சேதமடைந்துள்ளன. அதனால், சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டப்பணிகளை செயல்படுத்தி உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என சுற்றுப்புற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அருண்குமார்

இதுகுறித்து, சமூக ஆர்வலர் அருண்குமார் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சரணாலயத்தில் இருந்து 15 கி.மீ., சுற்றுப்புற தொலைவு வரையில் பறவைகளின் சரணாலயத்தின் அடையாளமாக பறவைகளின் ஓவியங்கள், பறவைகளின் பெயர் பலகைகள், அவைகள் விரும்பும் உணவுகளின் விவரங்கள் அடங்கிய அலங்கார பலகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. இவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தன.

இதன்மூலம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், உள்ளூர் கிராமக்கள் பல்வேறு கடைகள் அமைத்து வருவாய் ஈட்டினர். வனத்துறையும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலித்து வருவாய் ஈட்டியது. எனவே அனைவரையும் கவரும் வகையில் சாலை ஓரங்களில் தகவல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

ஆனந்த்ராஜ்

இதுகுறித்து, வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் கூறியதாவது: கரிக்கிலி பறவைகள் சரணா லயத்திலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. அதனால், பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுப் புற கிராமங்கள் மற்றும் ஏரிகளில் மரக்கன்றுகள் நடுதல், சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதி அறைகள் அமைத்தல், நெல்வாய், புக்கத்துறை, கருங்குழி, மேல்மருவத்தூர் மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து சரணாலயத்துக்கு வரும் சாலைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பறவைகளின் ஓவியங்கள் அடங்கிய பலகைகள், சரணாயலத்தை அடையாளப்படுத்தும் அலங் கார வளைவுகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், சுற்றுலா மேம்பட்டு உள்ளூர் மக்களின் வாழ்வாதரம் மேம்படும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் சுற்றுலா முற்றிலும் முடங்கியது. அதனால், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். தற்போது, மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது. மேலும், பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக திட்டமதிப்பீடுகள் தயாரித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். உரிய அறிவிப்புகளுக்கு பிறகு, சரணாலய ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தல் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் விரைவில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x