Published : 06 Jul 2023 04:03 AM
Last Updated : 06 Jul 2023 04:03 AM

கோவை குற்றாலம், கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆழியாறு கவியருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம். (அடுத்தபடம்) கோவை குற்றாலம் அருவியில் மலைகளுக்கிடையே சீறிப்பாய்ந்து வரும் வெள்ள நீர்.

கோவை / பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை மாவட்டத்தில் ஆழியாறு கவியருவி, கோவை குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், வில்லோனி வனப்பகுதியில் ஆழியாறு கவியருவி உள்ளது. சுமார் 80 அடி உயரத்தில் இருந்து மிதமான வேகத்தில் கொட்டும் அருவியில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வால்பாறை மலைப்பகுதியில் உள்ள தலநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழைநீர், சோத்துப்பாறை ஆற்றில் கலந்து வில்லோனி வனப்பகுதியில் கவியருவியாக கொட்டுகிறது. கவியருவி கடந்த 6 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு - 92 மி.மீ., மேல்நீராறு- 147 மி.மீ, கீழ்நீராறு- 85 மி.மீ, வால்பாறை-88 மி.மீ., காடம்பாறை- 22 மி.மீ., அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. வால்பாறையில் உள்ள சக்தி, தலநார் எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கவியருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

கோவை குற்றாலம்: கோவை குற்றாலத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் நேற்று முன்தினம் முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “நேற்றும் மழை பெய்ததால் அருவிக்கான நீர்வரத்து அதிகமாக இருந்தது. தமிழக பகுதியைவிட கேரள பகுதியில் அதிக மழை பெய்துள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x