Last Updated : 27 Jun, 2023 11:10 AM

 

Published : 27 Jun 2023 11:10 AM
Last Updated : 27 Jun 2023 11:10 AM

ஓராண்டாக நீடிக்கும் கோரிமேடு - அடிவாரம் சாலைப் பணி: பாதுகாப்பான சாலைக்கு ஏங்கும் ஏற்காடு சுற்றுலாப் பயணிகள்

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் உள்ள கோரிமேடு- அடிவாரம் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணியால் குறுகிவிட்ட சாலை | படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலத்தில் இருந்து ஏற்காடு செல்வதற்கான சாலையின் முக்கியப் பகுதியான கோரிமேடு- அடிவாரம் வரையிலான சாலையின் விரிவாக்கப் பணி ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காடுக்கு, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்து வருகிறது. ஏற்காடு செல்வதற்கு, சேலத்தில் இருந்து சேலம் கோரிமேடு- அடிவாரம் வழியாக சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக ஏற்காடு செல்வதே முக்கியப் பாதையாக உள்ளது. இதனால், சேலம் அஸ்தம்பட்டி- கோரிமேடு- அடிவாரம் சாலை, எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாக இருக்கிறது.

மேலும், கோரிமேடு, அடிவாரம், கொண்டப்பநாயக்கன்பட்டி, செட்டிச்சாவடி, குரும்பப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயன்படுத்தும் சாலையாக அஸ்தம்பட்டி- கோரிமேடு- அடிவாரம் சாலை உள்ளது. இதில், அஸ்தம்பட்டி- கோரிமேடு இடையிலான சாலை சென்டர் மீடியனுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தெருவிளக்கு வசதியுடன் போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஆனால், கோரிமேடு- அடிவாரம் சாலை குறுகியதாக இருந்ததால், அதில் 1.6 கிமீ தூரத்துக்கு சுமார் ரூ.15 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், பணிகள் இதுவரை முடியாமல் உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் போதிய பாதுகாப்பு இல்லாத சாலையில் பயணிக்க வேண்டியிருப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கூறியது:

ஏற்காடு சுற்றுலாப் பயணிகளில் 90 சதவீதம் பேர், கோரிமேடு- அடிவாரம் சாலையையே பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த சாலை எப்போதும் வாகன நெரிசலுடன் தான் இருக்கிறது. இதே சாலையில் உள்ளூர் மக்களின் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களும் தினமும் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், சாலையில் நடைபெறும் விரிவாக்கப் பணியால், ஆங்காங்கே சாலையின் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதுபோன்ற இடங்களில் வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, சாலையில் இட வசதியின்றி தடுமாற வேண்டியுள்ளது.

மேலும், சென்டர் மீடியன் இல்லாத நிலையில், ஆங்காங்கே குறுகலாக உள்ள சாலையைக் கடக்கும்போது, வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஆபத்து நிலவுகிறது. தெரு விளக்கு இல்லாத நிலையில், இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு, சாலையை தெளிவாக பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என்றனர்.

சாலை விரிவாக்கம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

கோரிமேடு- அடிவாரம் சாலை விரிவாக்கப் பணியில், 5-ல் 4 கல்வெட்டு பாலங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மேலும், சாலை அமைக்கும் பணியும் ஓரளவு முடிக்கப்பட்டுவிட்டது. சாலையோரங்களில் மின் கம்பங்கள், மாநகராட்சி குடிநீர் குழாய்கள் ஆகியவை இருப்பதால், அவற்றை முறையாக அகற்றிய பின்னரே, சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள முடியும். சுமார் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டியிருந்தது. கோடை காலமாக இருந்ததால், மின் விநியோகம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க, மின் கம்பம் அகற்றும் பணி சற்று தாமதமானது.

இதேபோல, குடிநீர் குழாய்களை அகற்றுவதும் தாமதமானது. சாலையோரத்தில் சில இடங்களில் மரங்களை அகற்ற வேண்டியுள்ளது. சேலம் மாநகராட்சி, மின் வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வரும் ஜூலை மாதத்துக்குள், சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

கோரிமேடு- அடிவாரம் சாலை விரிவாக்கம் முடிவடையும்போது, சேலத்தில் இருந்து ஏற்காடு மலைப்பாதை வரையிலான சாலை, சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சியான பயணத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x