Last Updated : 15 Jun, 2023 05:53 PM

 

Published : 15 Jun 2023 05:53 PM
Last Updated : 15 Jun 2023 05:53 PM

பொழுதுபோக்கு மையத்துடன் கூடிய திரைப்பட நகரம் புதுச்சேரியில் தொடங்குவது எப்போது?

புதுச்சேரி மணப்பட்டில் உருவாக்கப்பட்ட திரைப்பட நகரத்தில் அரசு மூலம் கட்டப்பட்ட வீடுகள் | படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: சுற்றுலா நகரமான புதுச்சேரியில், திரைப்பட படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பல உச்ச நட்சத்திரங்களும் புதுச்சேரிக்கு தொடர்ந்து படப்பிடிப்புகளுக்காக வருகின்றனர். சமீபத்தில் வெளியாகி, உலகளவில் வசூல் குவித்த, ‘பொன்னியின் செல்வன்’ தொடங்கி இங்கு படப்பிடிப்பு நடந்து, ஹிட்டான பல படங்கள் உண்டு.

வரலாற்று சிறப்புமிக்க அரிக்கமேடு, கடற்கரை சாலை, பாரதி பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் போன்ற சுற்றுலாதளங்களை பல படங்களில் பார்க்க முடியும். குறைந்த கட்டணம், எளிதில் படப்பிடிப்புக்கான அனுமதி, இடையூறு இல்லாத சூழல் போன்ற காரணங்களால் கடற்கரை சாலை, ஒயிட் டவுன் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் படப்பிடிப்பு குழுவினருக்கு வசதியாகிப் போனதால் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்த பலரும் ஆர்வம் கொள்கின்றனர். செட் போடுவதற்கான செலவு குறைகிறது. நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்த படப்பிடிப்புகள் மூலம் உள்ளூர் வர்த்தகம், வேலை வாய்ப்புகள் பெருகுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்தச் சூழல் இருந்து வரும் நிலையில், இதை மேலும் சிறப்பாக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கடந்த 2004-ம்ஆண்டு அப்போதும் முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் ரங்கசாமியிடம், ‘புதுச்சேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க வேண்டும்’ என்று நேரில் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று திரைப்பட நகரம் அமைக்க அப்போதைய அரசு முடிவு செய்தது. இதற்காக மணப்பட்டு பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அங்கு திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை நடத்தி, பணிகளை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்பின் நிதி நெருக்கடி காரணமாக அந்தப் பணிகள் அப்படியே கைவிடப்பட்டன. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் புதுவையில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மீண்டும் திரைப்பட நகரம் மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்க முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டார்.

நிதி பற்றாக்குறையை தவிர்க்க, மத்திய அரசை அணுகிய போது ஒத்துழைப்பு கிடைக்காத சூழலிலும் புதுவை அரசு 2-வது கட்டமாக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் கன்னியக்கோவில் - மணப்பட்டு செல்லும் சாலையில் இருந்து திரைப்பட நகரம் மற்றும் பொழுதுபோக்கு மையம் அமையும் இடத்திற்கு செல்ல தார்ச் சாலை, பூங்கா உள்ளிட்ட சில வசதிகள் செய்யப்பட்டன.

இந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது. அப்போதும் திரைப்பட நகரம் அமைப்பதற்கான எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. அதன்பின், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், மாநிலத்தின் வருவாயை பெருக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும், அது அறிவிப்பாகவே தொடர்கிறது. திரைப்பட நகரம் குறித்து தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் கூறுகையில், "மணப்பட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கின. அதன்பின் ஆட்சி மாற்றம், நிதி நிலைமை காரணமாக பணிகள் முடங்கின.

தற்போது மத்திய அரசு நிதி உதவியுடன் மணப்பட்டில் திரைப்பட நகரம், பொழுதுபோக்கு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. சுற்றுலா நகரமான புதுச்சேரியில், எங்கள் பகுதியில் திரைப்பட நகரத்தின் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், இப்பகுதி மிகப்பெரிய வளர்ச்சியடையும்.

அரசு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இதை அறிவிப்பாக வெளியிடுகிறதே தவிர முழுவீச்சில் பணிகளைச் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார். அரசு வட்டாரங்களில் இது பற்றி கேட்டதற்கு, "திரைப்பட நகரத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. ஆனால், ‘கோப்பு சரியாக இல்லை’ என்று திட்டத்தை உயர் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

மீண்டும் மத்திய அரசு நிதி உதவியுடன் திரைப்பட நகர பணிகளை தொடங்க மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி மத்திய கலாச்சார அமைச்சக அதிகாரிகள் புதுவை வந்து ஆய்வு செய்தனர். திரைப்பட நகரம், பொழுதுபோக்கு மையத்தை வணிக ரீதியாக பயன்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முடிவடைந்ததும் திரைப்பட நகரத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பது குறித்து அந்தக் குழு முடிவு செய்யும். அதன் பின் மணப்பட்டு பகுதியில் நவீன திரைப்பட நகரம் மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கும். நடப்பு நிதியாண்டில் இதற்கான பணிகள் நடக்க வாய்ப்புள்ளது" என்கின்றனர் உறுதியாக. இந்தத் திட்டம் நனவாக வேண்டும்; அதன்மூலம் புதுச்சேரியின் வர்த்தகம் மேலும் உயர வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x