Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

பழங்குடி பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் : உதகையில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் மேம்பாட்டு திட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலாடாவில் பழங்குடி இனப் பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க். படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், பணியர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், இருளர், பணியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாகவே இருந்து வந்தனர். இந்த இனப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்திலேயே முதல் முறையாக உதகை அருகே பாலாடாவில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகில் பழங்குடி பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பழங்குடிஇனத்தில் இருந்தும் 2 பெண்கள் என்ற அடிப்படையில், 12 பெண்கள் சுழற்சி முறையில் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 8 மணி நேரப் பணியும், அதற்குமேல் பணி செய்தால் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த பங்க், ஊராட்சிப் பகுதியில் உள்ளதால் லிட்டருக்கு 87 பைசாகுறைவாக பெட்ரோல் கிடைக்கிறது. இதனால், பாலாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் இங்கு பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். இதுகுறித்து பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ச.உதயகுமார் கூறியதாவது:

மத்திய பழங்குடியின நல அமைச்சகம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் பெண்களுக்கு, மாதந்தோறும் ரூ.8,500 மற்றும் 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இவர்களது ஊதியமும், ஊக்கத்தொகையும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x