Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் இருந்து ஆவின் பால் உபபொருட்கள் - மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு செய்கிறார் மாநில பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்.

புதுக்கோட்டை/ தஞ்சாவூர்

தமிழகத்தில் இருந்து ஆவின் பால் உபபொருட்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என மாநில பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிலையத்தை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் சென்று நேற்று ஆய்வு செய்த, மாநில பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி விற்பனை செய்யப்படுகிறதா என தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் நிர்வாகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் சார்பில் ஐஸ்கிரீம், நெய், பால்கோவா, மோர், தயிர் உட்பட 152 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பல பொருட்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு ஆவின் உபபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அது முடக்கி வைக்கப்பட்டிருந்தது. விரைவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு பால் உபபொருட்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும்.

அதிமுக ஆட்சியில் தினமும் 36 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உற்பத்தியிலும், விற்பனையிலும் தலா 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

தாய்ப்பாலுக்கு நிகரான, கலப்படமற்ற ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டும். தனியார் பாலில் கலப்படம் போன்ற விதிமீறல் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பணியாளர்களுக்கு கரோனா ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றார்.

தஞ்சாவூரில் ஆய்வு

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சா.மு.நாசர், கூறியதாவது:

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் லிட்டருக்கு ரூ.6 விலை அதிகரித்தபோது, தனியாரும் பால் விலையை உயர்த்தி அறிவித்தனர். ஆனால், தற்போது ஆவின் மட்டும்தான் விலையை குறைத்துள்ளதே தவிர, தனியார் நிறுவன பால் விலை குறைக்கப்படவில்லை.

வருவாய் இழப்பு

ஆவின் பால் விற்பனை நிலையத்தில், ஆவின் பொருட்களைத் தவிர, டீ உட்பட வேறு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, பால் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் வருவாயை சரிகட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

இந்த ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், பால்வளத் துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால், ஆட்சியர் ம.கோவிந்தராவ், ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார், மேலாளர் செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x