Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM

கீழ்பவானி வாய்க்காலில் - கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு உள்நோக்கத்துடன் எதிர்ப்பு : அதிமுக ஆதரவு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

கீழ்பவானி வாய்க்காலை ரூ.740 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதால், அதனை சமாளிக்கும் வகையில் ஆளுங்கட்சி சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மேலும், கசிவுநீர் காரணமாக மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதோடு, 100-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளுக்கும் நீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.740 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, சமீபத்தில் கோவையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த எதிர்ப்பு தேர்தலின்போது எதிரொலிக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சித்த போது விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை ரத்து செய்தார். ஆனால், தற்போதைய அதிமுக அரசு மீண்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் ஒருபிரிவினர் கீழ்பவானி வாய்க்காலை புனரமைக்கும் திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். இதுதொடர்பாக கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயச் சங்கப்பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு 2019-ல் தொழில்நுட்பக் குழுக்கள் அமைத்து, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்பே, மத்திய அரசின் நிதியுதவியுடன் கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தைக் கெடுப்பதற்காக சிலர் உள்நோக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை.

இந்தத் திட்டத்தால் பாசன கால்வாய் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்பட்டால், காலதாமதம் இல்லாமல் கடைமடை வரை நீர் சென்று சேரும், என்றனர்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு எதிராக சென்னிமலை, பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் பெரும் திரளாக விவசாயிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி ஆளுங்கட்சி ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்வதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

தேர்தலில் விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற நிலைப்பாடு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x