Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

நீலகிரியில் ஜப்பான் நாட்டு முறையில் தேயிலை ஏலம் நடத்த முடிவு கூடுதல் விலை கிடைக்கும் என தேயிலை வாரியம் நம்பிக்கை

இந்தியாவில் முதன்முறையாக நீலகிரி தேயிலை ஏலம் ஜப்பான் முறையில் ஆன்லைன் மூலம் நடத்தவுள்ளதாகவும், இந்த ஏல முறையால் தேயிலைக்கு உரிய விலை கிடைக்கும் என்றும் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான பயிற்சிகள் குன்னூரில் தேயிலை வாரியம் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேயிலைத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். 180 தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலை ஏலத்தில் சரிவர விலை கிடைக்காமல் பல தொழிற்சாலைகள் மூடும் அபாயம் இருப்பதால் இதை சரிசெய்வதற்காகவும், தேயிலைத் தொழிலை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாப்பதற்காகவும் தென்னிந்திய தேயிலை வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

முதற்கட்டமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த ஆங்கிலேயர் முறையிலான தேயிலை ஏலத்தில் மாற்றம் செய்து ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் ஜப்பானிய முறைப்படி தேயிலை ஏலம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாரியம் செய்துவருகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் தற்போது வர்த்தகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த வாரம் தேயிலை ஏலத்தில் விற்கப்பட்ட விலையில் மார்க்கெட் சூழலுக்கு ஏற்ப மைனஸ் 10 சதவீதம் அல்லது பிளஸ் 10 சதவீதம் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயிக்க வேண்டும். இதிலிருந்து விற்பனையாளர்கள் நிர்ணயிக்கும் விலை 5 நொடிக்கு ஒருமுறை படிப்படியாக கணினியில் கூடிக் கொண்டே இருக்கும். விலை கட்டுப்படியாகாதவர்கள் ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். இதன் மூலம் தேயிலைக்கு சிண்டிகேட் அமைத்து மிகப்பெரிய நிறுவனங்கள் விலையை தங்கள் கட்டுக்குள் வைப்பது தவிர்க்கப்படும் என்றார்.

இதுகுறித்து தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வைரவன் கூறும்போது, “காலை 9 மணிக்குத் தொடங்கும் ஏலம் மாலை 5 மணிக்கு முடிவடையும்போது விற்காமல் உள்ள தேயிலைக்கு மீண்டும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் மறு ஏலம் நடத்தப்படும். இவை அனைத்தும் ஏற்கெனவே நடக்கும் ஆன்லைன் ஏலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடத்தப்படுவதால் தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x