Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM

அதிகார துஷ்பிரயோக புகார்களால் - செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைக்கப்படும் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகத்தின் மீதான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை அடுத்து காபந்து நிர்வாகத்தை கலைக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் காட்பாடி, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு கிளை செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் செஞ்சிலுவை சங்க நிர்வாகத்தின் குளறுபடி, முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். மேலும், செஞ்சிலுவை சங்க கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் தற்காலிகமாக காபந்து நிர்வாகக்குழுவை நியமித்து சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அதன்படி, காபந்து நிர்வாகத்தின் செயலாளராக மாறன், துணைத்தலைவராக வெங்கடசுப்பு, பொருளாளராக உஷாநந்தினி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். காபந்து நிர்வாக குழுவின் ஆயுட்காலம் 6 மாதங்கள் என்பதுடன் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இதுநாள் வரை பொதுக்குழுவை கூட்டாததுடன் காபந்து நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக ஆளுநருக்கு செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலர் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக செஞ்சிலுவை சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘காபந்து நிர்வாகம் விதிகளை மீறி அதிகப்படியான செலவினங்களை செய்து வருகிறது. காபந்து செயலாளர் யாரையும் பணி நீக்கவும், நியமிக்கவும் முடியாது. ஆனால், அதெல்லாம் இங்கு நடக்கிறது. வேலூர் செஞ்சிலுவை சங்க மாவட்ட நிர்வாக கட்டிடத்தை உணவகமாக மாற்றவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

வேலூரில் வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட நேரத்தில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் யாரும் களத்தில் இல்லாதது வேதனையாக உள்ளது. தற்போதைய செயலாளர் அதிமுகவில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், பொருளாளர் உஷாநந்தினி, திமுகவில் பதவியில் உள்ளனர். விதிகளின்படி அரசியல் கட்சி பிரமுகர்கள் செஞ்சிலுவை சங்க பொறுப்புகளில் நியமிக்கக்கூடாது’’ என தெரிவித்தனர்.

இதுகுறித்து நிர்வாகக்குழுவின் தரப்பினர் கூறும்போது, ‘‘குற்றச்சாட்டுகள் தவறானது. தற்போதைய நிர்வாகக்குழுவை வரும் டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்து முன்னாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செயலாளர் மாறன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. தற்காலிகமாக தினக்கூலி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததால் நிர்வாகக்குழு முடிவின்படி பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். புதிய ஓட்டுநரை தேடி வருகிறோம். அவரை மாவட்ட ஆட்சியர்தான் நியமனம் செய்ய முடியும். மழைக்காலத்தில் வேலூர் வட்டாட்சியருடன் இணைந்து நிவாரண முகாம்களில் தங்கியவர்களுக்கு உணவு வழங்கியுள்ளோம்’’ என தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘செஞ்சிலுவை சங்கத்தை கலைக்க இருக்கிறேன்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x