Published : 18 Jan 2021 03:14 AM
Last Updated : 18 Jan 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளும் வெறிச்சோடியகரோனா தடுப்பூசி முகாம்கள் 54 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம் நேற்றும் வெறிச்சோடியது. 54 பேர் மட்டுமே தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதற் கட்டமாக கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி மருந்து போடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்தது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

ஆனால், கரோனா தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ள முன்கள பணியாளர்கள் விரும்பாத தால், இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளே தடுப்பூசி முகாம்கள் வெறிச்சோடின.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் 1,200 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதல் நாளில் 175 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

2-ம் நாளில் விடுபட்டவர்களும் சேர்ந்து அதிக நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித் தனர். ஆனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் வழக்கம்போல வெறிச்சோடின.

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்கெனவே முன்பதிவு செய்த வர்கள் அச்சத்தின் காரணமாக, முகாம் நடைபெறும் இடங்களுக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், புதுடெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு உடல் இறுக்கம், சோர்வு, ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக வெளியான தகவலால் முதல் நாளை காட்டிலும் 2-வது நாள் முன்கள பணியாளர்கள் வருகை பாதியாக குறைந்தது.

2-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 400 பேரில் 27 பேர் மட்டுமே நேற்று தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 300 பேரில் 12 பேர் மட்டுமே தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 பேரில் 15 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி மருந்துகளை போட்டுக்கொண்டனர்.

இதன் மூலம் 2-வது நாளில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று 54 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி மருந்துகளை போட்டுக்கொண்டதாகவும், அடுத்து வரும் நாட்களில் முன்கள பணியாளர்களுக்கு நோய் தடுப்பூசி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு திட்டமிட்டப்படி முன்பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x