Published : 05 Jul 2021 03:15 AM
Last Updated : 05 Jul 2021 03:15 AM

ராணிப்பேட்டை புளியங்கண்ணு ஏரியில் - தோல் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் :

ராணிப்பேட்டையில் தோல் கழிவுகளை ஏரியில் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு பகுதியில் பெரியஏரி உள்ளது. போதிய மழை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக ஏரி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகள் இந்த ஏரியில் இரவு நேரங்களில் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், ஏரியின் அடையாளம் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வருவதாகவும், ஏரியை மீட்க ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், அதிகாரிகள் இதுவரை நடவ டிக்கை எடுக்காததால் ஏரியில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ள தாகவும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ராணிப்பேட் டையில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் அந்த தொழிற்சாலைக்கு சொந்தமான லாரியில் ஏற்றிக்கொண்டு ஏரியை நோக்கி நேற்று முன்தினம் வந்துக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தி தோல் கழிவுகளை கொட்ட வந்த லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், புளியங்கண்ணு ஏரியில் இனி குப்பைக்கழிவுகள், தோல் கழிவுகள் கொட்டினால் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x