Published : 20 May 2021 03:13 AM
Last Updated : 20 May 2021 03:13 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை கூடுதலாக விற்பனை :

மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடி ஆவின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதப்படுத்தப்பட்ட ஸ்டான்டர்டைஸ்டு பால்(பச்சை பாக்கெட்), பதப்படுத்தப்பட்ட நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) விற்பனை செய்யப்படுகிறது. அரசின் உத்தரவின்படி ஒரு லிட்டர் ஸ்டாண்டர்டைஸ்டு பால் ரூ. 44-க்கும், நிறை கொழுப்பு பால் ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ராமநாதபுரம் நகரில் அரண்மனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விற்பனையகங்களில் ஸ்டாண்டர்டைஸ்டு பால் லிட்டருக்கு கூடுதலாக ரூ. 6 வைத்து ரூ. 50-க்கு விற்பனை செய்கின்றனர். இதில் அரை லிட்டர் பாலை ரூ. 25-க்கு (அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ. 22) விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நிறை கொழுப்பு பால் லிட்டருக்கு ரூ. 7 கூடுதலாக வைத்து ரூ. 57-க்கு விற்பனை செய்கின்றனர். இதில் அரை லிட்டர் பாலை ரூ. 29-க்கு (அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.25) விற்பனை செய்கின்றனர்.

அரசு அறிவித்தும் விலை குறைப்பு செய்யாமல் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியைச் சேர்ந்த மனோகரன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் காரைக்குடி அதிகாரிகளுக்கு புகார் செய்தார். அதன் அடிப்படையில ஆவின் அதிகாரிகள் ராமநாதபுரத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், 2 நாட்களாகியும் ராமநாதபுரத்தில் கூடுதல் விலைக்குத்தான் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் இருந்து சில புகார்கள் வந்துள்ளன. அதன்படி விற்பனை முகவர்களிடம் விசாரணை செய்து, கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என எச்சரித்துள்ளோம். தொடர்ந்து விற்றால் இன்னும் 2 நாட்களில் முன் அறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட முகவர்களின் நியமனம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x