Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்த தேர்தல் - தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு : மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு மையிட்ட விரலை உயர்த்தி காண்பிக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, எந்தவித அசம்பா விதங்களும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாநிலம் முழுவதும் 71.79 சதவீத வாக்கு கள் பதிவாயின.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர் தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திய பின்னர், 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். பகல் 1 மணிக்குள்ளாகவே 39 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பதிவாயின.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு கையுறை, கிருமிநாசினி வழங்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தவும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் சில மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் பழுது சரி செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

மேலும் 537 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 10,183 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட மொத்தம் 46,203 வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் முறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, மாநில கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டது.

வாக்குப்பதிவையொட்டி தமிழகம் முழுவதும் 300 கம்பெனிகளைச் சேர்ந்த 23,200 துணை ராணுவப் படையினர், தமிழகம் மற்றும் பிற மாநில போலீஸார், ஊர்க்காவல் படையினர், சிறை மற்றும் தீயணைப்பு படையினர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாக்குச்சாவடி பணியில் 4 லட்சத்து 91,027 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 2 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மற்றவர்கள் மே 2-ம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்கு அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள்

தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 23,777 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை 6 முதல் இரவு 7 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க ஏதுவாக, அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே சுகாதாரத் துறை சார்பில் கவச உடைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையிலேயே கரோனா நோயாளிகள் வாக்களிக்க வந்தனர். இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறை வடைந்தது.

இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 71.79 சதவீத வாக்குகள் பதிவாயின. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள் நடைபெற்றாலும், பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 75 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல் லப்பட்டன. அங்குள்ள பிரத்யேக அறை களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டு சீல் வைக்கப்பட்டது.

அப்பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், நுழைவுவாயில்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

சென்னையில் குறைவு

இதனிடையே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, "வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பணம் பறிமுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் இன்று நள்ளிரவே திரும்பப் பெறப்படும். கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்" என்றார்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தனர். இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் அதிமுகவும் திமுகவும் சந்தித்துள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x