Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் வைகைச்செல்வன், ஹெச்.வி.ஹண்டே உட்பட 77 பேருக்கு விருது முதல்வர் பழனிசாமி வழங்கினார்­

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் 2021-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி. உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர்.

சென்னை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு திருவள்ளுவர் விருது உட்பட 77 வகையான விருதுகளை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்தமிழ்மொழி மற்றும் இலக்கியவளர்ச்சி, தமிழ் சமுதாய உயர்வுக்குத் தொண்டாற்றியவர்களுக்கு திருவள்ளுவர் திருநாள், சித்திரைதமிழ்ப்புத்தாண்டு, சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வார இதழ், திங்களிதழ் விருதுகள், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்கக விருதுகள், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், மதுரை உலகத்தமிழ் சங்க விருதுகள், தமிழ்ச்செம்மல் விருதுகள் என 77 விருதுகளை முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கும், கடந்தஆண்டுக்கான பெரியார் விருது -தமிழ் மகன் உசேன், அம்பேத்கர் விருது - வரகூர் அருணாசலம், அண்ணா விருது - மறைந்த கடம்பூர்எம்.ஆர்.ஜனார்த்தனன், காமராஜர் விருது - ச.தேவராஜ், பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன், பாரதிதாசன் விருது - அறிவுமதி, திரு.வி.க விருது - வி.என்.சாமி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது -வீ.சேதுராமலிங்கம் ஆகியோருக்கு விருதுகளுடன் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றையும் முதல்வர்பழனிசாமி வழங்கினார்.

அதேபோல், கபிலர் விருது - செ.ஏழுமலை, உவேசா விருது - கி.ராஜநாராயணன், கம்பர் விருது - முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, சொல்லின் செல்வர் விருது - நாகை முகுந்தன், உமறுப்புலவர் விருது - ம.அ.சையத் ஹசன்,ஜி.யு.போப் விருது - ஜெர்மனியைச்சேர்ந்த உல்ரீகே நிகோலசு, இளங்கோவடிகள் விருது - மா.வயித்தியலிங்கன், அம்மா இலக்கிய விருது -தி.மகாலட்சுமி, சிங்கார வேலர் விருது - ஆ.அழகேசன், மறைமலையடிகளார் விருது - மறை தி.தாயுமானவன், அயோத்திதாச பண்டிதர் விருது - கோ.ப.செல்லம்மாள், அருட்பெருஞ்சோதி வள்ளலார்விருது - ஊரன் அடிகள், காரைக்கால் அம்மையார் விருது - மோ.ஞானப்பூங்கோதை, 2019-ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித்தமிழ் விருது- சே.ராஜாராமன் ஆகியோருக்கு முதல்வர் வழங்கினார்.

கடந்த ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது கு.சிவமணிக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது சுவாமி விமூர்த்தானந்தர், சோ.சேசாச்சலம், ராம.குருநாதன், ப.குணசேகர், பத்மாவதி விவேகானந்தன், சு.ஜோதிர்லதா கிரிஜா, ஜெ.ராம்கி, மீரா ரவிசங்கர், திலகவதி, கிருஷ்ணபிரசாத் ஆகியோருக்கும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

மதுரை உலகத் தமிழ்ச்சங்க விருதுகளில் கடந்த ஆண்டுக்கான இலக்கிய விருது பிரான்ஸைச் சேர்ந்த அலெக்சிசு தேவராசு சேன்மார்க்குக்கும், மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த சுப.திண்ணப்பனுக்கும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதில், திருச்சி மாவட்டத்துக்கான விருது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘குறள் இனிது’ மற்றும் ‘சபாஷ் சாணக்யா’ ஆகிய தொடர்கள், வணிக மேலாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதிவரும் சோம வீரப்பனுக்கு முதல்வர் வழங்கினார்.

மேலும், சென்னை பல்கலைக்கழக அரபுத் துறை பேராசிரியர் ஜாகிர் உசேனின் திருக்குறள் அரபு - இசைக்குறள் தகட்டை முதல்வர் பழனிசாமி வெளியிட, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, க.பாண்டியராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், செயலர்கள் பி.சந்திரமோகன், மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x