Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

ஊரப்பாக்கம் அருகே 10 அடி பள்ளம் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வட்டாட்சியர் ஆய்வு :

ஊரப்பாக்கம் அருகே ஜெகதீஷ் நகரில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வண்டலூர் வட்டாட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர் கன மழையால், ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுக்குமாடிகள், தனி வீடுகள், சாலை என அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டுமாவட்டம், ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றுமுன்தினம் திடீரென பள்ளம் ஏற்பட்டது. குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் வரவேற்பறையில் சுமார் 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

மழைநீர் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் வீட்டின் கீழ் தளத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு, தரை தளத்தில் பள்ளம் விழுந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். அப்போது கட்டிடத்தைக் கட்டிய கட்டுமான நிறுவன ஊழியரிடம் விசாரணை நடத்தினர்‌. மேலும் ஜெகதீஷ் நகர் பகுதிக்கு வரும் கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பிய நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கட்டிடத்தை இடிப்பதற்காக வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீர்வள ஆதாரத் துறையினருடன் ஆலோசனை செய்த பின் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x