Last Updated : 28 Nov, 2021 03:08 AM

 

Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உயிரிமயமாக்கல் முறையில் - குப்பைகளை முழுவதுமாக அகற்றும் பணி தொடக்கம் : 15 மாதத்தில் 7.5 லட்சம் டன் அகற்றப்படும் என தகவல்

புதுச்சேரி குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளும் உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குருமாம்பட்டு பகுதி. இங்கு அரசுக்கு சொந்தமான 23.6 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி நகராட்சியிலிருந்து 179 டன், உழவர்கரை நகராட்சியிலிருந்து 174 டன் மற்றும் அரியாங்குப்பம், வில்லியனூர் ஆகிய பகுதிகள் என தினசரி மொத்தம் 400 டன் வரையிலான குப்பைகள் கொட்டப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு சுமார் 17 ஏக்கரில் 13 மீட்டர் முதல் 23 மீட்டர் வரையிலான உயரத்தில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைக் கிடங்கில் அடிக் கடி நிகழும் தீ விபத்தின் காரணமாக உருவாகும் புகையினால் குருமாம்பட்டு மற்றும் அதனைச் சுற்றி யுள்ள கோபாலன்கடை, ஐயங்குட்டிப்பாளையம், தமிழக பகுதியான பெரம்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி பலமுறை போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இக்குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றுவதற்கு புதுச்சேரி அரசு முயற்சியெடுத்து தயாரித்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை சார்பில் குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் குப்பைகள் முழுவதுமாக அகற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி உள்ளாட்சித்துறை செயலர் வல்லவனிடம் கேட்டபோது, ‘‘குருமாம் பட்டு குப்பைக் கிடங்கில் நாளொன் றுக்கு 400 டன் குப்பைகள் வரை கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் திட்டப் பணிகள் நடக்கிறது. முதற்கட்டமாக நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. மழைக்கு பிறகு மற்ற பணிகள் தொடங்கும்.

தூய்மை இந்தியா திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.42.7 கோடி மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில் புதுச்சேரி நகர வளர்ச்சி முகமையினால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற் காக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதன்படி அடுத்த 15 மாதத்துக்குள் குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள சுமார் 7.5 லட்சம் டன் குப்பைகள் முழு வதும் அகற்றப்பட உள்ளது’’ என் றார்.

குப்பைகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ள தனியார் நிறு வனம் தரப்பில் கூறும்போது, ‘‘குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளில் முதலில் உயிரிபொருட்களை தெளித்து குப்பைகள் மக்க வைக்கப்பட்டு, அதிலிருந்து நவீன இயந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக், டயர், துணி,கட்டுமானக் கழிவுகள், மக்கும், மக்காத கழிவுகளாக தரம் பிரிக்கப்படும். தொடர்ந்து, பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சேர்த்து அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்படும். கட்டுமானக் கழிவுகள் மற்றும்சாதாரண மண் உள்ளிட்டவைசாலைப் பணிகள் உள்ளிட்டவற் றுக்கு பயன்படுத்தப்படும். இதர உரமாக மாறிய மக்கும் குப்பைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முழுவதுமாக அகற்றும் பணியினால் சுற்றுவட்டார மக்க ளுக்கு நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x