Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு :

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இக்குழுவில் மத்திய உள் துறை இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் விஜய் ராஜ்மோகன், ரனஞ்செய் சிங், எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கடை அருகே பாதிக்கப்பட்ட பயிர்களையும், புகைப்படங்களையும் நேற்று பார்வையிட்டனர். மேலும், மாவட்டத்தில் மழையால் ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாகப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விளக்கினார்.

மேலும், மாவட்டத்தில் தொடர் மழையால் 100 ஏக்கரில் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 1,331 கூரை வீடுகள், 316 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 368 மாடுகள், 82 ஆடுகள் இறந்துள்ளன. ஆறுகள், வாய்க்கால்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆட்சியர் விளக்கிக் கூறினார்.

அப்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை தோட்டங்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை என்றும், இதனால் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆய்வின்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம், திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x