Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

பேரணாம்பட்டில் தொடர் மழையால் சோகம் - பழமையான வீடு இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப மரணம் : 9 பேர் மருத்துவமனையில் அனுமதி; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி

பேரணாம்பட்டில் மழையின் காரணமாக பழமையான வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் தொடர்மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பேரணாம்பட்டு நகரில் ஓடும் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, அருகில் உள்ள புதுவீதி, ஆதம்பாஷா தெரு, அஜிஜியா தெரு, தோப்பு வீதிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளநீர் புகுந்தது. அங்குள்ள வீடுகளில் 3 அடி அளவுக்கு வெள்ள நீர் தேங்கியதால், பல வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் பள்ளிவாசல், தனியார் கட்டிடங்களில் தஞ்சம்அடைந்தனர்.

இதில், அஜிஜியா தெருவில் அனிஷா பேகம்(63) என்பவரது வீட்டில், மழையால் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் 18 பேர் குடும்பத்துடன் தங்கினர். பழமையான அந்த வீடு நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அவ்வீட்டில் தங்கியிருந்த 18 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் உயிரிழப்பு

காவல் மற்றும் தீயணைப்பு, வருவாய்த் துறையினர் இணைந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு நடுவில் ஹன்னா(7), ஷன்னு அன்சாரி (23), தவ்பீக்(19), தவ்ஷிப் (18), ஹபீப்(30), நபீசா(50), மொய்தீன்(6), ஹஜிரா தன்சீர் (30), ஹஜிரா(8) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மிஸ்பா பாத்திமா(21), ருஷிநாஸ்(25), அனிஷா பேகம்(54), தன்ஷிலா (30), கவுசர்(50), மனுல்லா(13), தமீல்(4), அபிரா(3), அப்ரா(6) ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் பேரணாம்பட்டு நகருக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

நிவாரண உதவி அறிவிப்பு

பேரணாம்பட்டில் வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x