Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் நடந்த சிறப்பு முகாம்களில் - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.38 லட்சம் பேர் விண்ணப்பம் :

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான 2 நாள் சிறப்பு முகாமில்பெயர் சேர்ப்பதற்கு 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைய உத்தரவின்படி ஆண்டுதோறும் ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்வது, முகவரி மாற்றம், தொகுதிமாற்றத்தை பதிவு செய்வது உள்ளிட்டவற்றுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கும். இந்த ஆண்டு வக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவ.1-ம் தேதி தொடங்கியது. அன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்பு முகாம்கள்

2022-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவ.30-ம் தேதி வரை ‘www.nvsp.in’என்ற இணையதளம் வாயிலாகவும், தாலுகா அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பணியில் உள்ளவர்கள் வசதிக்காக, நவ.13, 14 மற்றும் 27, 28 ஆகிய 4 நாட்கள் சிறப்புமுகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, முதல் சிறப்புமுகாம் 13, 14-ம் தேதிகளில் (சனி,ஞாயிறு) நடத்தப்பட்டது. மழை காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும், இதர மாவட்டங்களில் சில பகுதிகளிலும் முகாம் நடக்கவில்லை.

இந்த 2 நாட்களில் மொத்தம் 5,90,539 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்க மட்டும்4,38,383 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய 54,072பேரும், திருத்தம் செய்ய 54,596பேரும், தொகுதிக்குள் முகவரிமாற்ற 43,488 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6 என்பது, புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் தொகுதியில் இருந்து வெளியில் வேறு தொகுதிக்கு செல்வோருக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 39,838 பேரும் குறைந்தபட்சமாக சென்னையில் 197 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நவ.13-ம் தேதிஎந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. அதேபோல நாகப்பட்டினம், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை காரணமாக விண்ணப்பங்கள் குறைவாகவே வந்துள்ளன. அடுத்தகட்ட சிறப்பு முகாம் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x