Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

மழைநீர் தேங்காதவாறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் : மக்களை கண்ணும் கருத்துமாக அரசு பாதுகாக்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை

பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மக்களை கண்ணும் கருத்துமாக திமுகஅரசு பாதுகாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, வடிகால்களை சீரமைக்கும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது. அணைகள், நீர்த்தேக்கங்களைதொடர்ந்து கண்காணித்து வந்தது.நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கான பணிகள் அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

அதனால்தான், சென்னை நகரில் நவ.6 இரவு தொடங்கி 11-ம் தேதி வரை தொடர்ச்சியாக அதிகனமழை பெய்த நிலையிலும், 2015 போல வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது. சில இடங்களில் தவிர்க்க இயலாதகாரணங்களால் சற்று தாமதமான போதும் பணிகள் தொடர்ந்து சரியாகவே நடைபெற்றன.

சென்னையில் நவ.7 காலை முதல் மாலை வரை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தேன். மக்களைசந்திக்கும் அடிப்படை கடமையையும் ஒவ்வொரு நாளும் மேற்கொண்டேன். அரசு இயந்திரம் 24 மணி நேரமும் இடைவெளியின்றி இயங்கும் வகையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள்உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. அமைச்சர்கள் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியனும் சென்னை நகரை வெள்ள பாதிப்பின்றி காப்பதில் பெரும் பங்காற்றினர்.

டெல்டா மாவட்டங்களில் சேதவிவரங்களை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் சென்று ஆய்வு செய்து நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்தனர்.

நவ.12-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், 13-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, 13-ம் தேதி தஞ்சைமாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டேன். நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 17.46 லட்சம் ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நவ.13 வரையிலானபாதிப்பு 68,652 ஹெக்டேர் நெற்பயிர்கள். இவற்றுக்கான காப்பீடு, இழப்பீடு கிடைக்கச் செய்வதுடன், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்காத வகையிலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் உணர்ந்து ஈரப்பத அளவை நிர்ணயிப்பதும் முக்கிய பணிகள்.அதுகுறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 15-ம் தேதிகன்னியாகுமரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன்.

ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், மழைநீர்தேங்காத வகையில் கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதி எடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில் உள்ளாட்சி நிர்வாகம் முடுக்கிவிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் சென்னையில், மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ்அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தொலைநோக்குப் பார்வையுடனான மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீர் ஆதாரங்களைப் பெருக்குவதே திமுக அரசின் தலையாய நோக்கம். ஒவ்வொரு திட்டத்திலும் முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் நடத்திய ஊழல்கள் களையப்படுவதுடன், விமர்சனங்களைப் புறந்தள்ளி, மக்கள் பணியில் திமுக அரசு தொடர்ந்து செயல்படும்.

இது எனது தலைமையிலான அரசு என்பதைவிட, நமது அரசுஎன்று குறிப்பிடுவதையே விரும்புகிறேன். இது உங்களால், விரும்பிஎன்னிடம் வழங்கப்பட்ட ஆட்சிஉரிமை. அதை மறக்காமல், பணியாற்றுவதே அரசின் இலக்கு.

பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. மழையிலும், வெயிலிலும் மக்களுக்கு குடையாக திமுக அரசு திகழும். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம். மாநிலத்தைக் காப்போம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x