Last Updated : 13 Nov, 2021 03:08 AM

 

Published : 13 Nov 2021 03:08 AM
Last Updated : 13 Nov 2021 03:08 AM

ஏரி திறக்கப்பட்டாலும் ஏக்கத்தில் விவசாயிகள்..! - 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஊசுடு ஏரி : தொடர் மழை பெய்தும் பயனில்லாமல் போகும் அவலம்

கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில் ஊசுடு ஏரி திறக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீரை அதிகளவில் சேமிக்க முடியவில்லை என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை மீது விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுவையில் கடந்த 26-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்துள்ளது. புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத் திலும் கன மழை பெய்துள்ளது.

கணிசமான நீர் வரத்தால் புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கால் படுகை அணைகள் நிரம்பியுள்ளன. சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் மலட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டு படுகை அணைகள் நிரம்பின. இதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள 84 ஏரிகளில் 59 ஏரிகள் நிரம்பியுள்ளன.

வீடூர் அணை நிரம்பியதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் வரத்தால் ஊசுடு ஏரி நிரம்பியுள்ளது. ஊசுடு ஏரி தனது முழுக் கொள்ளளவான 3.50 மீட்டரை எட்டியுள்ளது. இதேபோல பாகூர் ஏரி முழுக் கொள்ளளவான 3 மீட்டரை எட்டியுள்ளது. ஊசுடு ஏரி நிரம்பியதால் நீர்வரத்து வாய்க்கால்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பாகூர் ஏரியிலிருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழர் காலத்து ஏரி..

புதுச்சேரி மாநிலத்தின் பழம் பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ‘ஊசுடு ஏரி’. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் பகிர்கின்றன.

புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.275 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 540 மில்லியன் கனஅடி. ஊசுட்டேரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சி ஆற்றில் இருந்து ஏரிக்கு பெருமளவில் நீர் வருகிறது.

புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழக பகுதியிலும், 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும் உள்ளது. தோராயமாக 1,500 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை, காசிப்பாளையம். மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள் வரை இந்த ஏரி பரவியுள்ளன. இந்நிலையில், ஊசுடு ஏரி நேற்று திறக்கப்பட்டுள்ளது. ஏரி திறக்கப்பட்டாலும் இப்பகுதி விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏரி பராமரிப்பு மிக மோசமாக உள்ளது என்று புதுவை அரசு மீதும், பொதுப்பணித்துறை மீதும் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "தண்ணீரை சேமிப்பதற்கான எந்த வழியையும் புதுச்சேரி அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் செய்யவில்லை. ஊசுடு ஏரி தூர்வாரப்பட்டு 40 ஆண்டுகளாகி விட்டன. கரையையும் பலப்படுத்தவில்லை. மழைநீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது நீர் திறக்கப்பட்டு ஆற்றின் மூலம் கடலுக்குதான் வீனாகப்போகிறது.

ஏரிகளுக்கு வரும் கிளை வாய்க்கால்கள் எதையும் தூர்வாரவில்லை. 50 கிராமங்கள் இந்த ஏரியை நம்பியே உள்ளன. ஏரிக்கான சுத்துக்கேணி கிளை வாய்க்கால் மோசமாக உள்ளது. பிள்ளையார்குப்பம் படுகை அணை மோசமாக உள்ளது. முறையாக ஏரியைத் தூர் வாரியிருந்தால் இந்த பெருமழைக்கு அதிகளவில் நீரை இருப்பு வைத்திருக்க முடியும்.

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. ‘தடுப்பணையாவது கட்டுங்கள்’ என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பொதுப்பணித்துறையினர் பணி செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தொடர்ந்து ஏதும் செய்யாத நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று இப்பகுதி விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x