Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ரோம் சென்ற நிலையில் - வாடிகனில் போப் பிரான்சிஸ் - மோடி சந்திப்பு : கரோனா, பருவ நிலை மாற்றம், வறுமை ஒழிப்பு குறித்து ஆலோசனை

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று உலக தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

வாடிகன் சிட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸையும் அவர் சந்தித்தார். அப்போது இருவரும் கரோனா பரவல் தடுப்பு, பருவ நிலை மாற்றம், வறுமை ஒழிப்பு உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 16-வது ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இத்தாலி பிரதமர் மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்றுமுன்தினம் இத்தாலி புறப்பட்டுச் சென்றார். ரோம் நகர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி அரசின் மூத்த அதிகாரிகள், இத்தாலிக்கான இந்திய தூதர் நீனா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர்.

இதன்தொடர்ச்சியாக வாடிகன் சிட்டிக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவரை போப் அலுவலக தலைமை செயலர் லியோனார்டோ சபீன்ஸா வரவேற்றார். பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸை நேற்று பிரதமர் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருவரும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக கரோனா தொற்று பரவலை தடுப்பது, பருவநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. எனினும், போப் பிரான்சிஸும் பிரதமர் மோடியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தனியாக ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா வுக்கு வருகை தருமாறு போப் பிரான்சிஸ்ஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, போப் இரண்டாம் ஜான்பால் இந்தியா வருகை தந்திருந்தார். அதன்பிறகு, தற்போது போப் பிரான்சிஸை சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பிரான்சிஸ் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவரை சந்திக்கும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது.

அத்துடன், வாடிகன் சிட்டியின் செயலர் கார்டினல் பீட்ரோ பரோலினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். போப் பிரான்சிஸை சந்திக்கச் சென்ற பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும் உடன் சென்றனர்.

உலக தலைவர்களுடன் சந்திப்பு

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்கள் நேற்று ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் நரேந்திர மோடியும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்தனர். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து கரோனா முன்கள பணியாளர்களுடன் இணைந்து ஜி20 தலைவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஜி20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மரியோ தெராவி பேசும்போது, வளர்ச்சி அைடந்த நாடுகளில் 70 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஏழை நாடுகளில் 3 சதவீத மக்களுக்குகூட இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி திட்டத்தில் ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார். அவரின் கருத்தை உலக தலைவர்கள் ஆமோ தித்தனர். மேலும் புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மாநாட்டில் ஒரு மனதாக வலியுறுத்தப்பட்டது. ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

ஜி20 மாநாட்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்குச் செல்லும் மோடி, அங்கு நாளையும் நாளை மறுதினமும் (நவ.1, 2 ) நடைபெறும் பருவநிலை தொடர்பான மாநாட்டிலும் பங்கேற்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் சந்திக்க உள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x