Last Updated : 28 Oct, 2021 03:06 AM

 

Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருடன் சந்திப்பு- அரசியலில் ஆர்வம் காட்டுகிறாரா நடிகர் விஜய்?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை சென்னை பனையூரில் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்த நடிகர் விஜய்.

சென்னை

அண்மையில் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை கடந்த 25-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு விஜய் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

இது தொடர்பாக விஜய் மக்கள்இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்திடம் கேட்டபோது, ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில் சாவித்திரி (விழுப்புரம் மாவட்டம் எறையூர் ஊராட்சி), மொட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தல் ஊராட்சி) ஆகிய இருவரும் கிராம ஊராட்சித் தலைவர்கள்.

மற்ற 127 பேரும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேர் கிராம ஊராட்சி துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 129 பேரையும் விஜய் நேரில் சந்தித்தார். ஒவ்வொருவரும் விஜயுடன் தனித்தனியாகவும், குழுவாகவும் படம் எடுத்துக் கொண்டனர். மூன்றரை மணி நேரம் அவர்களுடன் விஜய் உற்சாகமாக கலந்துரையாடினார். ‘மக்கள் நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்க்க வேண்டும். மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்’ என்று அவர்களிடம் விஜய் வேண்டுகோள் விடுத்தார்’’ என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும். தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், மகன் அரசியலில் இறங்குவார் என்று கூறி வந்தார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது அன்றைய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கோவையில் விஜய் சந்தித்தார். ஆனாலும், அரசியலில் அவர் ஆர்வம் காட்டவில்லை.

அரசியலில் ஈடுபடுவது குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவுசெய்ய முயற்சி மேற்கொண்டபோது, விஜய் கடுமையாக எதிர்த்தார். இதனால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் எழுந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வீட்டிலிருந்து, வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தேமுதிக தொடங்கப்படுவதற்கு முன்பு விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த வெற்றி தந்த உத்வேகத்தில்தான் தேமுதிகவை தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அளவுக்கு விஜயகாந்த் உயர்ந்தார். இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்ததன் மூலம் அரசியலில் விஜய் ஆர்வம் காட்டுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x