Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

மகளிர் சுயஉதவி குழு, விவசாயம், கல்விக்கு - வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் : அரசுடன் இணைந்து செயல்படவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மகளிர் சுயஉதவிக் குழு, விவசாயம், கல்விக்கான கடன்களை வங்கிகள் அதிக அளவில் வழங்குவதுடன், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ரூ.20 லட்சம் கோடி ஜிஎஸ்டிபியுடன் நாட்டிலேயே 2-வது பெரியமாநில பொருளாதாரமாக தமிழகம்உள்ளது. தமிழக அரசு முக்கியநலத் திட்டங்கள், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துகிறது.

கரோனா காலம் பின்னடைவுகள் மட்டுமின்றி, மறைமுகமாக பல நன்மைகளை செய்துள்ளது. ஒருசில மாதங்களில் மாநில மருத்துவ உள்கட்டமைப்பை சரிசெய்தோம். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்கு ரூ.4 ஆயிரம், 14 வகை மளிகைப் பொருள் வழங்கினோம். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். மக்களை காக்க வேண்டும் என்பதே இதற்கு காரணம். இதற்கு வங்கிகளும் உதவவேண்டும். ஏழை, எளியவர்கள், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்குவங்கிகள் உழைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

சுயஉதவி குழுக்களின் பொற்கால ஆட்சி திமுக ஆட்சி. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனி கவனம் செலுத்தினேன். இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு ரூ.20ஆயிரம் கோடி இலக்கு உள்ளது. கடந்த செப்டம்பர் வரை ரூ.4,951கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு இலக்கை அடையஎஞ்சிய தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும்.

பி.எம். ஸ்வாநிதி என்பது கரோனாவால் பாதிக்கப்பட்ட தெருப்புறசின்னஞ்சிறு விற்பனையாளர்களுக்கு மலிவு கடன்கள் வழங்கும் திட்டம். இதில், விண்ணப்பித்த அனைவரின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடன் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழக அரசு வங்கிக் கடன்அடிப்படையில் 3 சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது. சமீபகாலமாக மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில் 35.67 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அரசு அமைக்கும். எனவேஅரசின் திட்டங்களை வங்கிகள் ஆதரிக்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்.

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், இதுவரை 31.09 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 7.16 லட்சம் பயனாளிகளுக்கு விரைவாக கார்டுகள் வழங்க வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழில்களின் கீழ் நிலுவையில் உள்ள 104 விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க முடிந்த அளவுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநருமான பி.பி.சென்குப்தா, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி, நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா, பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x