Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

விமான நிலைய சோதனையின்போது - செயற்கைக் காலை அகற்றச் சொல்வதா? நடிகை சுதா சந்திரன் வேதனை : வருத்தம் தெரிவித்தது மத்திய பாதுகாப்பு படை

விமான நிலைய சோதனையின் போது தனது செயற்கைக் காலை நீக்கிக் காட்டுமாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சுதா சந்திரன், இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு மத்திய பாதுகாப்பு படை வருத்தம் தெரிவித்துள்ளது.

திரைப்பட, சின்னத்திரை நடிகையும், பிரபல பரதநாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். சிறு வயதில் நடந்த விபத்தில்தனது காலை இழந்தவர், செயற்கைக் கால் பொருத்திக்கொண்டு நடிப்பு, நடனம் என தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. தொழில்முறை பயணமாக நான்ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னை பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது, வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்து எனது செயற்கைக் காலைபரிசோதிக்குமாறு மத்திய பாதுகாப்பு படையினரிடம் கேட்கிறேன்.

ஆனால், அவர்களோ எனது செயற்கைக் காலை நீக்கிக் காட்டச் சொல்கின்றனர். ஒவ்வொரு முறையும் சாத்தியப்படும் மனித செயல்தானா இது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படையின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன்.

விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் (செயற்கை உறுப்புகள்) பாகங்களை நீக்கிப்பரிசோதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி உங்களை ஏன் அப்படி செய்யச் சொன்னார் என்று விசாரிக்கிறோம்.

எந்த பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருக்க, எங்கள் விதிமுறைகள் குறித்து ஊழியர்களிடம் மீண்டும் வலியுறுத்துவோம் என உறுதி கூறுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x