Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

மத்திய அரசு ஊழியர்களுக்கு : 3 சதவீத அகவிலைப் படி உயர்வு : மொத்தம் 31 சதவீதமாக அதிகரிப்பு

புதுடெல்லி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் குறிப் பிட்ட சதவீதம் அகவிலைப் படி வழங்கப்படுகிறது. ஓராண்டில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் பணவீக்கத்துக்கு ஏற்ப அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும். ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய 3 முறை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கடந்த 2020 ஜனவரி நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் 17 சதவீத அகவிலைப்படி பெற்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினங்கள் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஓய்வுப் பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் நிலுவைத்தொகையை ரொக்கமாகவும், பணிக் கொடையாகவும் பெறுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, ஜனவரி 1, 2020 (4 சதவீதம்), ஜூலை 1, 2020 (3 சதவீதம்), ஜனவரி 1, 2021 (4 சதவீதம்) என மொத்தம் 11 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமல்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குரிய அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28 சதவீதத்தில் இருந்து அகவிலைப் படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப் படி உயர்வும் ஜூலை மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்தார்.

இதன் மூலம் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. அகவிலைப் படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,488.70 கோடி கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x