Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM

காலி மனை விற்பனை செய்வதாக கூறி : ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது :

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தேவராஜ் (25). இவர், காலி மனை ஒன்றை வாங்க முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில், வாணியம்பாடி வட்டம் பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நந்தகோபால் (47) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், வாணியம்பாடி அடுத்த செட்டிக்குப்பம் பகுதியில் விலை குறைவாக காலி மனைகள் விற்பனைக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த தேவராஜ் செட்டிக்குப்பத்தில் உள்ள காலி மனைகளில் ஒன்றை வாங்க முயன்றார். 1,600 சதுர அடி கொண்ட காலி மனை ரூ.2.67 லட்சம் என நந்தகோபால் கூறினார். அதன்படி, நந்தகோபாலிடம் ரூ.2 லட்சம் முன் பணத்தை தேவராஜ் அப்போது வழங்கியதாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட நந்தகோபால் பாக்கி பணத்தை பத்திரப் பதிவு செய்யும் போது வழங்க வேண்டும் எனக்கூறினார். அதற்கு தேவராஜ் சம்மதித்தார். பாக்கி பணத்தை ஏற்பாடு செய்த தேவராஜ் காலி மனையை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என பல முறை அழைப்பு விடுத்தும் நந்தகோபால், பல காரணங்களை சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளார்.

அதற்குள்ளாக கரோனா தொற்று வேகமாக பரவியதால் அதையே காரணம் காட்டி நந்தகோபால் பத்திரப்பதிவு செய்வதை மேலும் காலம் கடத்தி வந்தார். இந்நிலையில், கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காலி மனையை பதிவு செய்ய தேவராஜ் முயன்றார். அப்போது தான், முன்பணம் கொடுத்த இடம் நந்தகோபாலுக்கே சொந்தமானது இல்லை என்பது தேவராஜூக்கு தெரியவந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த தேவராஜ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது நந்தகோபால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேவராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு எஸ்.பி., செல்வகுமார் உத்தரவிட்டார். குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் அதிபர் நந்தகோபால் காலி மனை விற்பனை செய்வதாகக் கூறி பலரிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வாணியம்பாடியில் பதுங்கியிருந்த நந்தகோபாலை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x