Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

நெல்லில் ஈரப்பதம் குறித்த அறிக்கை - 15 நாட்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் : தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தகவல்

தஞ்சாவூர் அருகே அரசூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதம் தொடர்பாக நேற்று ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்.

தஞ்சாவூர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.

மத்திய அரசின் விதிப்படி நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால், விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும், தொடர்ந்து மழை பெய்வதால் நெல்லை காய வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ஈரப்பதத்தில் 22 சதவீதம்வரை தளர்வு அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, இந்திய உணவு கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன், சி.யூனுஸ் உள்ளிட்ட மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், நெல் குவியலில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர். மேலும், ஈரப்பதம் அளவிடும் கருவியில் நெல்லின் மாதிரியை வைத்து ஆய்வு செய்தனர். அத்துடன் சிறிதளவு நெல்லை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் கான் கூறும்போது, ‘‘தற்போது நெல்லில் ஈரப்பதம் தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம். அதன் பிறகு மத்திய அரசு முடிவு செய்யும்’’ என்றார்.

இவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலாண் இயக்குநர் சங்கீதா, தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து மடிகை, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x