Last Updated : 20 Oct, 2021 03:08 AM

 

Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

கோவை மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் - மூச்சுத் திணறலை தடுக்கும் கருவி தட்டுப்பாடு : தீயணைப்பு வீரர்கள் சிரமப்படுவதாக புகார்

தீயணைப்பு நிலையங்களில் மூச்சுத் திணறலை தடுக்கும் ‘ப்ரீத்திங் அஃபாரெட்டஸ்’ கருவி தட்டுப்பாடு காரணமாக தீயணைப்பு வீரர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் ரயில் நிலையம் சாலை, பீளமேடு, கணபதி, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கோவைப்புதூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட 13 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. இங்கு நிலைய அலுவலர், முன்னணி தீயணைப்பாளர், தீயணைப்பாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

தகவல் கிடைத்த இடங்களுக்கு, அடுத்த சில நிமிடங்களில் சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், பஞ்சு வகைபொருட்கள், துணி வகைகள் உள்ளிட்ட புகை அதிகளவில் வரக்கூடிய தீ விபத்து சம்பவங்களின் போதும், ஆழமான தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும்போதும், வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ‘ப்ரீத்திங் அஃபாரெட்டஸ்’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீயணைப்பு நிலையங்களில் இக்கருவி முழுமையாக பயன்பாட்டில் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தீயணைப்பு வீரர்கள் கூறும்போது,‘‘ப்ரீத்திங் அஃபாரெட்டஸ் என்ற கருவி தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும்முக்கியமானதாகும். ஒரு தீயணைப்புநிலையத்துக்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 கருவிகள் தேவைப்படும். ஆனால், தற்போதைய நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், இக்கருவி வீரர்களின் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் இல்லை. இருக்கும் கருவிகளும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.

குறிப்பாக, சமீபத்திய மாதங்களில் தொடங்கப்பட்ட சில தீயணைப்பு நிலையங்களில் இக்கருவிகள் இன்னும் பயன்பாட்டுக்கு ஒதுக்கவே இல்லை. இதனால், பெரும்பாலான தீயணைப்பு வீரர்கள் இக்கருவியை எதிர்பார்க்காமல், ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தீயணைப்பு வீரர்களுக்காக ரூ.3.50 கோடி மதிப்பில் மூச்சுக் கருவிகள் வாங்கப்படும் என தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் கூறும்போது,‘‘ப்ரீத்திங் அஃபாரெட்டஸ் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கருவி 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும். இவை முறையாக ரீ-ஃபில்லிங் செய்து பயன்படுத்தப்படுகின்றன. சிறிய தீயணைப்பு நிலையங்களில் ஒன்றும், பெரிய தீயணைப்பு நிலையங்களில் குறைந்தபட்சம் நான்கும் வைக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாட்டை போக்க கூடுதல் எண்ணிக்கையில் இக்கருவிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x