Last Updated : 17 Oct, 2021 03:07 AM

 

Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் - முடி காணிக்கை மண்டபம் அமைக்க மண் பரிசோதனை நிறைவு : ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது

கோவை

மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய முடி காணிக்கை மண்டபம் அமைக்க மண் பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்கள் பலர், தங்களது முடியை காணிக்கையாக அளிக்கின்றனர். இதற்காக மலையின் மீது, பிரகாரத்துக்கு செல்லும் படிக்கட்டு பாதைக்கு இடதுபுறம் முடி காணிக்கை மண்டபம் அமைந்துள்ளது. மருதமலை முருகன் கோயிலுக்கு முடி காணிக்கை அளிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

பிரத்யேக டோக்கன் பெற்று, வரிசையில் நின்று வளாகத்துக்குள் செல்கின்றனர். இவ்வளாகத்தில் ஒரே சமயத்தில் 15 பேர் மட்டுமே அமர முடியும். முடி காணிக்கை செய்தவர்கள் குளிப்பதற்கு குளியலறை வசதி போதிய அளவில் இல்லை. முடி காணிக்கை செலுத்துவதற்காக வரிசையில் அதிகம் பேர் நிற்கும் போது, பிரகாரத்துக்கு செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல இடையூறு ஏற்படுகிறது.

இதையடுத்து, புதிய முடி காணிக்கை மண்டபம் கட்ட வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறையை பக்தர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும் என தமிழகஅரசு சமீபத்தில் அறிவித்தது.

இதுதொடர்பாக இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா கூறும்போது, ‘‘மருதமலை முருகன் கோயிலில், மலையின் மீது உள்ள முடி காணிக்கை மண்டபத்துக்கு பதிலாக, அடிவாரத்தில் படிக்கட்டு பாதையை ஒட்டிய பகுதியில் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. இங்கு ஒரே சமயத்தில் 50 பேர் அமரலாம். கடந்த வாரம் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் வல்லுநர்கள் குழுவினர், மண்டபம் அமைய உள்ள பகுதியில் மண் பரிசோதனை செய்துள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வரும் வாரத்தில் கிடைத்துவிடும். பின்னர், பிரத்யேக ஒப்பந்த நிறுவனத்தினரை தேர்வு செய்து, முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும்.

இதனருகில் பிரத்யேக குளியலறை, கழிவறைகள் கட்டப்படும். மூன்று மாதங்களுக்குள் இப்புதிய மண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x