Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

வாடிக்கையாளர்களுக்கு பல டிசைன்களில் - தங்க, வைர நகை அறிமுகம் : நகைக்கடை உரிமையாளர்கள் தகவல்

சென்னை

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், வாடிக்கையாளர்களைகவரும் வகையில் புதிய நகைகளை தயாரிக்கும் பணியில் நகைக்கடை உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘செய்கூலி சேதாரம் இல்லை, தங்கம், வைரம் வாங்கினால் தங்க, வெள்ளி நாணயம் இலவசம்’ என்பன போன்ற அறிவிப்புகளை நகைக்கடைகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய டிசைன்களில் தங்க, வைர நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டில் தீபாவளியின்போது நகை விற்பனை முடங்கியது. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், நகைக் கடைகளுக்கு மீண்டும் மக்கள் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய டிசைன்களில் நகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களில் நகைகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த தீபாவளிக்கு நகை விற்பனை சுமார் 25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் பி.ஏ.ரமேஷ் பாபு கூறும்போது, “கரோனா தாக்கத்தின்போது ஒட்டுமொத்த முதலீடும் முடங்கியது. தங்கத்தில்தான் முதலீடு அதிகரித்தது. மேலும், தங்கம் என்பது நம் மக்களின் பாரம்பரியத்தில் ஒன்றாக இருக்கிறது. எனவே, தங்கத்தை சொந்த பயன்பாட்டுக்காக வாங்குவதும், முதலீடு செய்வதற்கும் சிறந்த இடமாக இருப்பதால், மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.

காலத்துக்கு ஏற்றார்போல், தங்க, வைர நகை தொழிலில் நாங்கள் மாற்றம் செய்து வருகிறோம். தற்போதுள்ள பெண்கள் பெரும்பாலும் ‘லைட் வெயிட்’ நகைகளை விரும்பி அணிகிறார்கள். அதனால் அந்த வகை நகைகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. கேரளா ஆரம், செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல், மோதிரம் ஆகியவற்றை நூற்றுக்கணக்கானடிசைன்களில் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். இதுதவிர, குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்குப் பரிசளிக்கும் வகையில் தங்க, நகை ஆபரணங்களும் விற்பனைக்கு இருக்கின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x