Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

மனுத்தாக்கல் தொடங்கிய சில மணி நேரத்தில் - நீதிமன்ற உத்தரவால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நிறுத்தம் :

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய உடனே நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. முதல் நாளில்யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

புதுவை மாநிலத்தில் 2-வது முறையாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. நவம்பரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற இருந்தது. இதில் முதல்கட்டமாக புதுவை, உழவர்கரை நகராட்சி தலைவர்கள், 75 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுவை நகராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகம் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதேபோல உழவர்கரை நகராட்சித் தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது.

புதுவை, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பலரும் வேட்பு மனு விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.சுமார் 20-க்கும் மேற்பட்டடோர்அலுவலகத்திற்கு சென்று விதிமுறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து விண்ணப்பங்களையும் வாங்கினர்.

இதுபற்றி விசாரித்தபோது, “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் உள்ளோம். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சாதாரண மக்களும் உள்ளாட்சித்தேர்தலில் பங்கேற்க முடியும்.தேர்தல் நடப்பது உறுதியானால் நாங்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்து போட்டியிடுவோம்” என்றனர். இந்நிலையில் அரசியலமைப்பு சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நேற்று முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x