Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM

மேற்கு வங்கத்தின் பவானிபூர் இடைத்தேர்தலில் - 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி :

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதிஇடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி சுமார் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருந்தபோதிலும், மம்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற 6 மாதத்துக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் தள்ளிவைக்கப்பட்ட சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த செப்.30-ம் தேதி தேர்தல்நடத்தப்பட்டது. அத்துடன் காலியாக இருந்த மேற்கு வங்கத்தின் பவானிபூர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் பிபிலி தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த மம்தா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலைவிட 58,835 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மம்தாவுக்கு 85,263 வாக்குகளும் பிரியங்காவுக்கு 26,428 வாக்குகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு 4,226 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

வெற்றி குறித்து மம்தா கூறும்போது, ‘‘நந்திகிராம் தொகுதியில் சதி செய்து என்னை தோற்கடித்தவர்களுக்கு பதிலடிகொடுப்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. பவானிபூர் தொகுதி மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த முறை எந்த ஒரு வார்டிலும் எங்கள் கட்சி தோல்வி அடையவில்லை’’ என்றார்.

பிரியங்கா திப்ரிவால் கூறும்போது, ‘‘தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். சகோதரிக்கு வாழ்த்துகள். அதேநேரம் இந்தப் போட்டியில் நான்தான் ‘மேன் ஆப் த மேட்ச்’. ஏனென்றால், மம்தாவின் கோட்டையிலேயே 25 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளேன்’’ என்றார்.

சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஒடிசாவின் பிபிலி தொகுதியில் ஆளும் பிஜு ஜனதா தள வேட்பாளர் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x