Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

கூட்டுறவு வங்கிகளில் நகைகள் ஆய்வு - மண்டல பதிவாளர்கள் தினசரி அறிக்கை அளிக்க வேண்டும் : பதிவாளர் அறிவுறுத்தல்

சென்னை

கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை 100 சதவீதம் ஆய்வு செய்வது தொடர்பாக தினமும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக பல்வேறுகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டநிலையில், பல கூட்டுறவுசங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, சில சங்கங்களில் போலி நகைகள் அடகுவைக்கப்பட்டுள்ளதும், சிலசங்கங்களில் நகை வைத்ததுபோல கணக்கு காட்டப்பட்டு, கடன் பெறப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கூட்டுறவுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த செப். 24-ம் தேதிகூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவின்பேரில், நகைக் கடன்களை ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டது. தற்போது அடுத்தகட்ட அறிவுறுத்தல்களை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.

அதன்படி, மண்டலப் பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய மொத்த நகைகளின் விவரம், ஆய்வு செய்யத்தேவையான குழுக்களின் எண்ணிக்கை, நகைகளை ஆய்வு செய்யத் தேவைப்படும் நாட்கள், 100 சதவீதம் நகைக்கடன் ஆய்வு முடிவுறும் நாள்உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பதிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 100 சதவீத ஆய்வுதொடர்பான தினசரி அறிக்கையை, பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x