Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி - கப்பலூர், ‘ரிங்’ரோடு டோல்கேட்கள் அகற்றப்படுமா? : முதல்வர் ஸ்டாலினிடம் மதுரை மக்கள் எதிர்பார்ப்பு

மதுரை மக்களை வதைக்கும் கப்பலூர், ‘ரிங்’ ரோடு சுங்கச் சாவடிகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் அகற்றப்படும் என சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக் கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் மதுரை ஒத்தக்கடையில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று, மதுரை மாவட்டத்தில் உடனே தீர்க்கக் கூடிய முக்கியப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய திருமங்கலத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாசு, ‘‘திருமங்கலம் பகுதியில் தினமும் நடக்கும் விபத்துகளில் காயமடைந்தோரின் உயிரைக் காப்பாற்ற அவசர ஊர்தியில் செல்லும்போது கப்பலூர் சுங்கச் சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத் திருக்கும். இதனால், உயிருக்குப் போராடுவோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை.

நான்கு வழிச்சாலையில் 60 கி.மீட்டருக்கு ஓரிடத் தில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால், சட்டத்தை மீறி திருமங்கலம் நகராட் சிக்குள் சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். இந்தச் சுங்கச்சாவடியை அகற்ற ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து முறையிட்டும் நடக்கவில்லை, ’’ என்றார்.

அதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்,’’ என்றார். இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப் பட்டது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங் கல்பட்டு மாவட்டங்களில் விதியை மீறி தேசிய நெடுஞ்சாலையில் அமைத்த 5 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித் தார். ஆனால், சட்டத்தை மீறி மத்திய, மாநில அரசுகள் அதிக சுங்கச் சாவடிகளை அமைத்துள்ள தென் மாவட்டங்களில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை ஒரு சுங்கச்சாவடிகூட அகற்றப்படவில்லை.

மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதியளித்தபடி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் ரிங் ரோட்டில் அம்மா திடல், சிந்தாமணி, வலையபட்டி ஆகிய இடங்களில் அமைத்துள்ள மாநில சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.

மீனாட்சிமிஷன் மருத்துவமனை சந்திப்பு சாலையில் இருந்து திருமங்கலம் வரையிலான ‘ரிங்’ ரோட்டை கடக்க வாகன ஓட்டிகளுக்கு 45 நிமிடமாகிறது. அதனால், முதல்வர் ஸ்டாலின் நினைத்தால், இன்றே மாநில நெடுஞ்சாலைத் துறை அமைத்த ‘ரிங்’ ரோடு சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தலாம். இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x