Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

மும்முனை மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டு சிறை :

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது பெயரில் இயங்கி வரும் வெல்டிங் பட்டறைக்கு அவரது மகன் சங்கர் மும்முனை மின்சார இணைப்பு கேட்டு கடந்த 2010-ம் ஆண்டு தேவனாங்குறிச்சி மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அப்போதைய மின்வாரிய வருவாய் ஆய்வாளர் கணபதி மும்முனை மின்சாரம் வழங்க ரூ.2,800 லஞ்சம் கேட்டுள்ளார். எனினும், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சங்கர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அறிவுறுத்தல்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வருவாய் ஆய்வாளர் கணபதியிடம் சங்கர் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் துறையினர் அவரை பிடித்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 2,800 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் கணபதி ஆஜராகாததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x