Published : 27 Sep 2021 03:22 AM
Last Updated : 27 Sep 2021 03:22 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-வது கட்டமாக - சிறப்பு முகாம்களில் 64,321 பேருக்கு கரோனா தடுப்பூசி : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு. அருகில், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை/வேலூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 3-வது கட்ட சிறப்பு முகாம்களில் 64,321 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முதல் சிறப்பு முகாமில் 1,04,325 பேருக்கும், கடந்த 19-ம் தேதி நடைபெற்ற 2-வது சிறப்பு முகாமில் 77,085 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டது.

இதைத்தொடர்ந்து 3-வது கட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 1,017 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத் துவத் துறையினர் பங்கேற்று பணியாற்றினர். திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி, தச்சம் பட்டு மற்றும் நவம்பட்டு கிராமங் களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் செல்வக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 3-வது கட்ட சிறப்பு முகாம்களில் 64,321 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 3 சிறப்பு முகாம்கள் மூலமாக 2,45,731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. வேலூரில் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகள் என மொத்தம் 804 இடங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 546 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடை பெற்றன. ஆற்காடு நகராட்சி தொடக்கப்பள்ளி, வாலாஜா வட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்றிரவு 7 மணி வரை நடைபெற்ற இம்முகாம்கள் மூலம் 33,567 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 526 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 3-வது வாரமாக நேற்று நடைபெற்றது. அச்சமங்கலம் உயர்நிலைப் பள்ளி, நாட்றாம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தோப்பல குண்டா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார். நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 27 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x