Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

உத்தரவிடுங்கள்; உங்களுக்காக உழைக்கவே காத்திருக்கிறேன் - மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் : காணொலி உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் பேசியதாவது:

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். ஆட்சிக்கு வந்து இன்றுடன் 4 மாதங்கள் கடந்துள்ளன. 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்.

மே 7-ல் பதவியேற்ற சில மணிநேரத்தில், 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், ஆவின் பால்லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசபயணம், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை, தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைசெலவினத்தை காப்பீட்டு திட்டம்மூலம் அரசே ஏற்பு என 5 திட்டங்களுக்கு கையொப்பமிட்டேன்.

இதன் தொடர்ச்சியாக, முதன்முறையாக வேளாண்மைக்கென தனியாக பட்ஜெட், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை ரூ.3 லிட்டருக்கு குறைப்பு, ஊரகப் பகுதிகளில் ரூ.1,200 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ரூ.100 கோடியில்நமக்கு நாமே திட்டம், இயற்கைவேளாண்மை வளர்ச்சித் திட்டம்,மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பத்திரிகையாளர்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், மக்களின் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லாத நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன். அவர்கள் கட்டணமும் முழுமையாக செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 14 வகை மளிகைப் பொருட்கள் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகை, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி, அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.317.40 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம், பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு, அவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு, அயோத்திதாசர் மணிமண்டபம், வஉசி பெருமையைப் போற்ற 14 அறிவிப்புகள், பாரதியைப் போற்ற 14 அறிவிப்புகள், சமூகநீதி நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கக் குழு, 1987-ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தொடக்கம், எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, 'இலக்கிய மாமணி' விருது உருவாக்கம், விருது பெற்றவர்களை ஊக்குவிக்க, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் அரசு வீடு, அனைத்து சாதி அர்ச்சகர்கள் – பெண் ஓதுவார் நியமனம், ‘தகைசால் தமிழர்’ விருது, பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு என அறிவிக்காததையும் செய்துள்ளோம்.

இவற்றை ஏதோ ஆரம்ப வேகம்என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். இப்போது அறிவித்ததுபோல 3 மாதங்களுக்கு ஒருமுறை நானே இதை உங்களிடம் சொல்வேன். வாக்களித்தவர்களை 5 ஆண்டுகள் கழித்துதானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் நான் அல்ல. என்னை இயக்குவது மக்களாகிய நீங்களும் எனதுமனசாட்சியும்தான். நீங்கள் உத்தரவிடுங்கள்; உங்களுக்காகவே உழைக்க காத்திருக்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

அறிவிப்புகளான 202 வாக்குறுதிகள்

3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மசோதா நிறைவேற்றல், கரோனாவால் இறந்த மருத்துவர்கள், காலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, மகளிர்அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து

12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு என்பது உள்ளிட்ட தேர்தல்அறிக்கையில் சொல்லப்பட்ட பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகள், எனது பதிலில் 2 வாக்குறுதிகள், பட்ஜெட்டில் 43, வேளாண் பட்ஜெட்டில் 23, அமைச்சர்களின் அறிவிப்புகளில் 64, இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதி உட்பட 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியாகியுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x