Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

மாற்றுத் திறனாளி தற்கொலைக்கு காரணமான - நிதி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளி விவசாயி தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வேளாண்கடன் தவணையை செலுத்தத் தவறியதற்காக தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் தரக்குறைவாக பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாத மாற்றுத் திறனாளி விவசாயி மனோகரன் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வருமானம் இல்லாமல் வாடிய விவசாயியை தனியார்நிதி நிறுவன அதிகாரிகள் அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியது கண்டிக்கத்தக்கதாகும்.

கரோனா பாதிப்பால் கடன்தவணை செலுத்த முடியாதவர்களுக்கு குறைந்தது 6 மாத அவகாசம் வழங்கும்படி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. கடன் தவணையை மனோகரனால் செலுத்த முடியவில்லை என்றால் கூட, அதற்காக அபராதமோ, கூடுதல் வட்டியோ வசூலிக்கலாமே தவிர, வாகனத்தை பறிமுதல் செய்யவோ, அவரை தகாத வார்த்தைகளால் திட்டவோ தனியார் நிதிநிறுவனங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வழங்கிய பல தீர்ப்புகளில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் நிதி நிறுவனங்கள் அளிக்கும் நெருக்கடிகள், இழைக்கும் அவமானங்கள் காரணமாக இனியும் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் தனியார் நிதி நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளி விவசாயி மனோகரனின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயி மனோகரனின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x