Last Updated : 23 Sep, 2021 03:12 AM

 

Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? - முறைகேடுகளை கண்டறிவதில் கூட்டுறவுத் துறை தீவிரம் :

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை அடமானம் பெற்று வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருவதால், யாருக்கு தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், 5 பவுனுக்கு உட்பட்டு கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, முதல்வரும் இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதே நேரம், நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய முதல்வர், ‘ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

முன்னதாக, நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் தகுதியான பயனாளிகளைக் கண்டறிய, குடும்பத்தில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்கள் தொடர்பான பெயர், சங்கங்களின் விவரம், பெற்ற நாள், தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இதில், பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரு நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகைக்கடன் பெற்றது, ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர், பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகைக்கடன் பெற்றது, வறியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி பெறப்பட்ட கடன், போலி நகைகள் அடமானம், நகைகளை அடமானம் வைக்காமல், வைத்ததாக ஏமாற்றி நகை்க்கடன், ஒரு கிராமுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக நகைக்கடன் வழங்கியது என பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

அதிலும் குறிப்பாக, தூத்துக்குடியில், கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் நகையே இல்லாமல் ரூ.1.96 கோடிக்கு கடன் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கவரிங் நகையை கொடுத்து கடன் பெறப்பட்டது, கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் கூட்டுறவு சங்கத்தில் ஒரே நபர் 625 நகைக்கடன்கள் மூலம் 1,25 கோடியும், 647 கடன்கள் மூலம் வேறு நபர் 1.47 கோடியும், திருவண்ணாமலையில் ஒரே நபர் 614 கடன்கள் மூலம் 1.63 கோடியும் கடன்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே போல், பல்வேறு நபர்கள் கிலோ கணக்கில் நகைகளை வைத்து பல்வேறு கடன் சங்கங்களில் கடன் பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள்

இவற்றின் அடிப்படையில், தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 2021-ம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு நிறுவனத்திலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் 5 பவுனுக்கு மேல் நகை ஈட்டின்பேரில் கடன் பெற்றவர்கள், தவறாக அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையைப் பெற்று, நகைக் கடன் பெற்றவர்கள் மற்றும் இது போன்றவற்றில் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரே குடும்பத்தினர் பெயரில் 5 பவுனுக்கு மேல் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை தொடங்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறாக நகைக்கடன் பெற்றவர்கள் குறித்த தகவல்களை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பெற்று கூட்டுறவுத் துறை தள்ளுபடிக்கான ப்டடியலை தயாரித்து வருகிறது. அந்த வகையில் யாருக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.

இந்நிலையில், கடன் தள்ளுபடி கூட்டுறவுத் துறை அதிகாரி கூறியதாவது:

அரசு சார்பில் பல்வேறு தகவல்கள் வங்கிகளிடம் இருந்து பெறப்பட்டு, பல்வேறு வகைகளின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட்டு, கணினி மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சங்கங்களுக்கு பல சுற்றறிக்கைகள் வந்துள்ளதால், இவற்றில் குழப்பங்கள் உள்ளன.

இருப்பினும், எடுக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு குடும்ப அட்டையில் ஒருவர் பெயரில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் மட்டுமே தள்ளுபடியாகும். ஆனால், அவர் வருமானவரி கட்டுபவராகவோ, அரசு ஊழியராகவோ இருந்தால் தள்ளுபடி கிடைக்காது.

பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றிருந்தால் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காது. இதுதவிர, அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை பெற்றவர்கள் விவரங்கள் தற்போது எடுக்கப்பட்டு, அந்த அட்டைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் முறைகேடாக அட்டை பெற்றிருந்தால் அவர்களுக்கான கடன்களும் தள்ளுபடி செய்யப்படாது. இது குறித்த முழுமையான அரசாணை வெளியானதும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x